Wednesday, April 20, 2011

தமிழகத்தின் முதல் மாமன்னன் இராசராசசோழன்

தமிழகத்தை ஆட்சிபுரிந்த பண்டைய மன்னர்களில் மிகுந்த சிறப்பைப் பெற்றவன் மாமன்னன் இராசராசசோழன். சேர, சோழ, பாண்டிய, கொங்கு, தொண்டை எனும் தமிழகத்தின் ஐந்து நாடுகளையும் ஒருசேர முழுமையாக முதன்முதலில் ஆட்சிபுரிந்தவன் இவன். மேலும் தமிழகத்திற்கு அப்பாலும், கடல் கடந்தும் தன் ஆட்சிப்பரப்பை விரிவுபடுத்திய முதல் தமிழ்மன்னன் என்ற சிறப்பும் இராசராசனுக்கே உரியது.
இராசராசனின் சிறப்புகளுக்குப் பெரிதும் காரணமாக எடுத்துக் கூறத்தக்கவற்றுள் தஞ்சைப் பெரிய கோயில், இராசராசனின் வெற்றிகள் மற்றும் மெய்க்கீர்த்தி, இராசராசனின் ஆட்சி நிர்வாகம், தேவாரப்பணி, கலைப்பணிகள் ஆகியன குறிப்பிடத்தக்கவை. இவற்றை இக்கட்டுரை சுருக்கமாக விளக்குகிறது.

தஞ்சைப் பெரிய கோயில்
இராசராசசோழ மன்னனின் சிறப்புகள் அனைத்திலும் விஞ்சி நிற்பது அம்மன்னன் கட்டுவித்த தஞ்சை பெருவுடையார் கோயில்தான். தஞ்சாவூர் என்ற பெயரைச் சொன்னாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இந்தப் பெரிய கோயில்தான். அந்த அளவுக்குச் சிறப்புப் பெற்றது இக்கோயில் என்பது நாடறிந்த செய்தி.
உலகத் தொன்மைக் கருவூலமாக இன்று பாதுகாக்கப்படும் இக்கோயில் கட்டப்பட்டுத் தற்போது ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைகின்றன. காஞ்சீபுரத்தில் இராசசிம்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்ட கயிலாசநாதர் கோயிலின் அழகில் மயங்கிய இராசராசனின் உள்ளத்தில் தோன்றிய எண்ணமே இக்கோயில் கட்டப்பட அடிப்படையாக அமைந்தது என்று கூறப்படுகிறது.
இந்தக் கோயில் ஒரு மாபெரும் கலைக்கூடமாக அமைக்கப் பட்டுள்ளது. கட்டடக் கலைத்திறன், எழில்மிகு சிற்பங்கள், ஓவியங்கள், வானோக்கி உயர்ந்த அழகிய கோபுரம், இராசராசனின் வெற்றிச் சிறப்பை எடுத்துரைக்கும் வாயில்கள், 12 அடி 10 அங்குலம் கொண்ட மாபெரும் சிவலிங்கம் என இவற்றின் சிறப்பைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
மலைகள், கற்கள் வளம் இல்லாத சோழநாட்டுத் தஞ்சை நகரில் இத்தகையதொரு கோயிலைக் கட்டுவதற்கு, பெரும் ஊர்திகள், இன்றைய புதுவகைப் பெரும் பொறிகள் இல்லாத காலத்தில் எத்தனை அரும்பெரும் பணிகளைச் செய்திருக்க வேண்டுமென எண்ணிப் பார்த்தால் பெரும் வியப்பு ஏற்படும்.
கோயிலின் சிறப்பு, சொல்லச் சொல்ல விரியுமாதலின் அதை இக்கட்டுரையில் அடக்க இயலாது. இதையறிந்தே தொல்லியலறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் இக்கோயிலை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்து இராஜராஜேச்சுரம் என்னும் பெரும் நூலை ஒரு கலைக் களஞ்சியமாக ஆக்கித் தந்துள்ளார்.

இராசராசனின் வெற்றிகளும் மெய்க்கீர்த்தியும்
முன்னரே கூறியபடி தமிழக மன்னர்களிலேயே முதல் மாமன்னன் இராசராசசோழன்தான். சோழநாட்டைத் தாண்டி இவன் தன் பேரரசை மிகப் பெரிதாக விரிவுபடுத்தினான். பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்து அமரபுயங்க பாண்டியனையும், சேரநாட்டின் மீது போர் தொடுத்து பாஸ்கர ரவிவர்மனையும் தோற்கடித்தான். வடக்கில் கங்கர்களைத் தோற்கடித்து மைசூர்ப் பகுதியையும், சாளுக்கியர்கள் மீது போர் தொடுத்து சாளுக்கிய நாட்டையும் கைப்பற்றினான். கலிங்கம் வரை இராசராசனின் ஆட்சி பரவியிருந்திருக்கிறது.
இராசராசன் பெரும் கடற்படையை வைத்திருந்ததால் கடல் கடந்து சென்றும் பல வெற்றிகளைப் பெற்றுள்ளான். சேரநாட்டின் மீது படையெடுத்த போது காந்தளூர்ச்சாலை என்னும் துறைமுகத்திலிருந்த சேரனின் கப்பற்படையை முழுமையாக அழித்ததை இராசராசனின் மெய்க்கீர்த்தி தெரிவிக்கிறது.
கடல்கடந்த நாடுகளான இலங்கை, இலட்சத்தீவு, கடாரம் ஆகிய நாடுகளின் மீதும் படையெடுத்துச் சென்று அவற்றைக் கைப்பற்றியுள்ளான்.
மன்னர்கள் பெற்ற வெற்றியையும், சிறப்புக்களையும் குறிப்பிடும் வகையில் மெய்க்கீர்த்தி எழுதப்படும் வழக்கம் முதலில் மாமன்னன் இராசராசனிடமிருந்துதான் தொடங்கியுள்ளது. ஓர் இலக்கிய நூலுக்குப் பாயிரம் போல மன்னனின் கல்வெட்டுச் செய்திகள் அனைத்திலும் தொடக்கமாக இந்த மெய்க்கீர்த்தி பொறிக்கப் பட்டுள்ளது.

இராசராசனின் ஆட்சி நிர்வாகம்
இராசராசனின் ஆட்சியில் உள்ளாட்சி நிர்வாகம் மிகச் சிறப்பாக இருந்துள்ளது. அரசனுக்கு உதவுவதற்காக அமைச்சர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் பலர் இருந்துள்ளனர். பேரரசு பல மண்டலங்களாகவும், மண்டலங்கள் கோட்டங்களாகவும், கூற்றம் அல்லது வளநாடுகளாகவும் பிரிக்கப் பட்டிருந்தன. இக்கூற்றங்கள் நாடுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன.
மண்டலங்கள் அரசனின் நெருங்கிய உறவினர்களான ஆளுநர்களின் பொறுப்பில் இருந்தன, கோட்டங்களில் இருந்த பொறுப்பாளர்கள் தங்கள் கோட்டங்களில் மக்கள் பணிகளைச் செய்து வந்ததுடன் மண்டல ஆளுநர்களுக்கும் உதவியாக இருந்தனர். மண்டல ஆளுநர்கள் தங்கள் மண்டலங்களின் நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டதுடன் மைய அரசின் தலைவனான பேரரசனுக்கு உதவினார்கள்.
குடியிருப்புகளில் பிராமணர்களின் குடியிருப்புக்கள் கிராமங்கள் எனவும், பொதுமக்களின் குடியிருப்பு ஊர்கள் எனவும், வணிகர்களின் குடியிருப்பு நகரங்கள் எனவும் வழங்கப்பட்டன. இவற்றை கிராம, ஊர், நகர அவைகள் நிர்வாகம் செய்தன. இவற்றிற்கான பொறுப்பாளர்கள் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இராசராசனின் உள்ளாட்சியில் மக்களாட்சி நடைபெற்றதை இதன்மூலம் அறியலாம்.
இராசராசன் கால நிர்வாக முறையில் குறிப்பிடத்தக்கது தன் நாட்டின் விளைநிலங்களனைத்தையும் துல்லியமாக அளந்து அவற்றின் தரத்தையும் நிர்ணயித்ததாகும். அதற்கென உலகளந்தான் கோல் என்ற அளவை பயன்படுத்தப் பட்டுள்ளது.
கடல்கடந்த வாணிகம் தென்கிழக்காசியா மற்றும் சீனா வரை பரவியிருந்துள்ளது சிறப்புக்குரியதாகும். அன்றைக்கிருந்த தமிழர் கப்பற்கலை நுட்பம் இதற்குப் பெரிதும் உதவியுள்ளது.

இராசராசனின் தேவாரப்பணி
தேவாரம் முழுமையாக அழிந்துவிடும் நிலையிலிருந்த போது அதனை அழியாமல் காத்து நமக்குக் கிடைக்கச் செய்த பெருமைக்கு உரியவன் இராசராசன். தில்லைத் திருக்கோயிலில் வைக்கப் பட்டிருந்த தேவார ஓலைச்சுவடிகளை வெளிக்கொணர முயன்ற போது தில்லைவாழ் அந்தணர்கள் அதைத் தர மறுத்தார்களாம். தேவாரத்தை எழுதியவர்களே வந்தால்தான் அவற்றை வைத்துள்ள அறைக்கதவைத் திறக்க அனுமதிப்போம் என்று கட்டுப்பாடு விதித்து மறுத்தார்களாம்.
மறைந்து போன பெருமக்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து வருதல் இயலாத செயலென்பது உலகறிந்தது. ஆனால் இவ்வாறு மறுத்தது தேவாரம் முழுதாய் அழிந்திட வேண்டும் என்ற கெடுமதியால்தான். ஆனால் இராசராசன் தேவார நால்வரின் திருமேனிகளைச் செய்வித்து அவற்றைக் கொண்டு போய் அறைக்கதவைத் திறக்க வைத்து, கரையான் தின்றவை போக எஞ்சிய தேவாரத்தை வெளிக்கொணர்ந்தான் என்ற செய்தி தேவாரத்தை இராசராசன் காத்தளித்ததை நமக்கு எடுத்துக் கூறுகிறது.
பன்னிரு திருமுறை ஆசிரியர்களில் 'திருவிசைப்பா' பாடிய கருவூர்த்தேவர் இராசராசனுக்கு மிக நெருக்கமானவராக விளங்கியவர். இவர்தான் தஞ்சைப் பெரிய கோயிலில் சிவபெருமானைப் பந்தனம் செய்வித்தவர் என்று சொல்லப்படுகிறது. கருவூர்த் தேவரின் திருவிசைப்பாப் பதிகத்தில் தஞ்சைப் பெரிய கோயில் சிறப்பிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இராசராசன் சிறந்த சிவப்பற்றுள்ளவனாக இருந்தமையால் பெரிய கோயில் கட்டுவித்தான். தன்னைச் 'சிவபாத சேகரன்' என்று சொல்லிக் கொண்டான். அந்த சிவப்பணி வரிசையில் தேவாரப் பணியையும் செய்து சிறப்புற்றான்.

கலைப்பணி
இராசராசன் காலத்தில் சிற்பம், ஓவியம், இசை, ஆடல் முதலிய கலைகள் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளன. தஞ்சைப் பெரிய கோயிலும் அதிலுள்ள சிற்பங்களும், கல்வெட்டுகளும் இராசராசன் காலத்திய சிற்பக்கலை வளர்ச்சியையும், மேன்மையையும், இராசராசனின் கலையுணர்வையும் எடுத்துக் காட்டுகின்றன. தஞ்சைக் கோயிலில் உலோகத்தாலான திருமேனிகளும் இராசராசன் காலத்தில் பல செய்யப் பட்டுள்ளன.
கோயிலில் இராசராசன் காலத்திலேயே சுவர்களில் வண்ண ஓவியங்கள் பல தீட்டப்பட்டுள்ளன. இவை சிதைந்த நிலையில் இன்றைக்கும் காண முடிகின்றன. இவை இராசராசன் காலத்திய ஓவியக்கலை வளர்ச்சிக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.
தஞ்சையில் பெரிய கோயிலிலும், பிற கோயில்களிலும் ஆடுவதற்காக 400 ஆடல் மகளிர் பணியமர்த்தப் பட்டிருந்தனர். அவர்களுக்குத் துணையாக ஆடலாசிரியர்களும், இசைக் கலைஞர்களும் பணியமர்த்தப் பட்டிருந்தனர். இவர்களுக்கு ஊதியம், விளைநிலங்கள், வீடுகள் முதலியன அளிக்கப் பட்டிருந்ததை தஞ்சைப் பெரிய கோயிலின் வெளிப்புறச் சுவரின் வடமேற்குப் பகுதியில் காணப்படும் பெரிய கல்வெட்டில் பொறிக்கப் பட்டுள்ள செய்திகள் மூலம் அறிய முடிகின்றது.
இச்செய்திகளின் வழியாக இராசராசன் இசை மற்றும் ஆடல் கலைகளுக்குச் செய்த பேருதவிகள் அறியலாகின்றன.

மாமன்னன் இராசராசசோழன் தமிழக வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் வகையில் அரும்பெரும் பணிகளைச் செய்து புகழ் பெற்றுள்ளான். இவ்வளவு சிறப்புப் பெற்ற இராசராசன் காலத்தில்தான் தமிழகத்தில் வடமொழிக்கு ஏற்றம் கிடைக்கத் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.