Monday, May 9, 2011

பத்துப்பாட்டில் பழந்தமிழர் மனைகள்

உலக வரலாற்றில் குறிப்பிடப்படும் பண்டைய நாகரிகங்களில் குறிப்பிடத்தக்கது தமிழர் நாகரிகம். தமிழர் உலக மாந்தர் இனங்களிலேயே தொன்மையானவர்கள். குமரிக்கண்டம் அழியாது இருந்திருந்தால் தமிழினத்தின் தொன்மையை யாரும் மறுத்துப் பேச முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.
தமிழர்களை, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்தகுடி எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது. தொல்காப்பியப் பொருளதிகாரத்தைப் படித்துப் பார்த்தால் தமிழன் இன்றைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே எந்த அளவு மேம்பட்ட நாகரிகத்தையுடையவனாக இருந்துள்ளான் என்பது அறியலாகும்.
அந்த நாகரிகத் தமிழன் கட்டடக் கலையில் எந்த அளவுக்குத் திறமுடையவனாக
இருந்தான் என்பதைக் காவிரியின் குறுக்கே கரிகாலன் கட்டிய கல்லணை நமக்குச் சான்று பகர்கிறது. சிறந்த பண்டைய நகரமைப்பு என்று போற்றப்படும் சிந்துவெளி நாகரிகமே தமிழர் நாகரிகம் எனத் தொல்லியலாளர்கள் நிறுவி வருகின்றனர். தமிழகத்திலுள்ளது போன்ற பண்டைய பெருங்கற் கோயில்களை வேறெங்கும் காண இயலாது.
அப்படிப்பட்ட தமிழர்கள் வாழ்ந்த இல்லங்கள் பற்றி நாம் அறியப் பண்டைய தமிழிலக்கியங்கள் பல செய்திகளைத் தருகின்றன. அவ்வகையில் சங்கத் தொகை நூல்களில் பத்துப் பாட்டில் சங்ககாலத் தமிழர்கள் வாழ்ந்த இல்லங்கள் பற்றிய செய்திகள் பல கிடைக்கின்றன.
பத்துப்பாட்டில் மனைகள் பற்றிய செய்திகள் தரும் பாடல்கள்
பத்துப்பாட்டுத் தொகை நூலில் உள்ள சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய ஏழு பாட்டுக்களில் மனைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
மனைகளின் வகைகள்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களிலும் உள்ள இல்லங்களைப் பற்றிய குறிப்புகள் பத்துப்பாட்டு இலக்கியங்களில் உள்ளன. அவை அந்தந்தப் பகுதியின் நிலைமைகளுக்கேற்பவும் மக்களின் பொருளாதார வளங்களுக்கு ஏற்பவும் இருந்ததை இலக்கியங்கள் கூறுகின்றன, அவ்வகையில் குடிசைகள், மாடங்களைக் கொண்ட வீடுகள், அரசர்களின் அரண்மனைகள், போர்க்களத்தில் அமைக்கப் பட்ட பாசறைகள் ஆகியன பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.
ஊர்கள், தெருக்கள், மதில்கள்,வேலிகள், கலங்கரை விளக்கம், குடிசைகளின் கூரைகள், வீடுகளின் முற்றம், கதவுகள், கால்நடைகளின் கொட்டில்கள் முதலியன பற்றிய செய்திகளும் கிடைக்கின்றன. மேலும் மனைநூல் இலக்கணப்படி கால்கோள் செய்தல் பற்றிய செய்திகளும் உள்ளன.
1.குடிசைகள்
ஐவகை நிலங்களிலும் குடிசைகள் இருந்துள்ளன. தினையரிந்த தாளாலே வேயப்பட்ட குறிய கால்களையுடைய குடிசைகள் இருந்ததைக் குறிஞ்சிப்பாட்டு கூறுகிறது.(1) தமிழகத்தில் பாலைநிலம் இல்லை. முல்லை நிலமும்,குறிஞ்சி நிலமும் வறட்சியில் வளங்குன்றியிருக்கும் நிலையையே பாலை என்றனர்.(2) பாலை நிலத்தில் இலைகளைக் கொண்டு வேயப்பட்ட குடிசை இருந்ததை மதுரைக்காஞ்சி இலைவேய் குரம்பை என்று கூறுகிறது.(3)
இந்த இலைகள் காய்ந்தால் உதிர்ந்துவிடும் தன்மை கொண்டனவாயினும் பாலை நிலத்தில் மழையில்லாத காலத்திற்கு அது போதுமானதாக இருந்திருக்கும் என்று உய்த்துணரலாம்.
தமிழகத்தில் தொண்டை நாட்டுப் பகுதியிலுள்ள வேலூர் வெப்பம் மிகுந்த நகரமாக இருப்பதை இன்று நாம் காண்கிறோம். சங்க காலத்திலும் மிகுந்த வெப்பமுள்ள ஊராகவே அது இருந்திருக்கிறது. மிகுகின்ற வெயிலுக்குக் குடிசை வீட்டிற்குள்ளே இருப்பவர்கள் வருந்தத்தக்க அளவு வெப்பம் மிகுந்து விளங்குகின்ற குடிலில் எயினக்குல மகளிரான எயிற்றியர் இருந்ததை, விறல்வேல் வென்றி வேலூர் எய்தின் உறுவெயிற் குலைஇய உருப்பவிர் குரம்பை (4) என்று சிறுபாணாற்றுப்படை எடுத்துரைக்கிறது.
எயினர் இல்லம்
எயினர் இல்லம் பற்றி இன்னும் சிறப்பாகப் பெரும்பாணாற்றுப் படையில் விளக்கப் பட்டுள்ளது. ஊகம் புல்லாலே வேயப்பட்ட உயர்ந்த நிலையையுடைய மதிலையும், மலையிடத்தே தூங்கும் தேனிறாலைப் போன்ற குதையினையுடைய அம்புக் கட்டினையும், கடிதாக ஒலிக்கும் துடிகள் தொங்குகின்ற திரண்ட காலையுடைய பந்தலையும், சங்கிலியால் நாய்களைக் கட்டி வைத்துள்ள கிட்டுதற்கரிய காவலமைந்த வீடுகளையும், உயிர்வாழ் முள்வேலிகளையும் அதாவது முட்செடிகளையே காவல் மதிலாகவும் அதனைச் சூழ்ந்த காவல் காட்டினையும் உருண்ட கணைய மரமிட்ட ஒட்டுக் கதவினையும் கொண்டதாக அவை இருந்தன.(5) இவை எளிய குடிசைகளைவிட மேம்பட்ட நிலையைக் கொண்டதாக அறியலாகின்றன. கொடுமுடி வலைஞர் குடிசைகள்
மூங்கிற்கோலை வரிசையாகச் சார்த்தி வெண்மையான மரக்கொம்புகளை இடையிடையே கலந்து தாழை நாரால் கட்டி, தர்ப்பைப் புல்லால் வேயப்பட்ட கூரையை உடையதாக வலைஞர் குடிசைகள் இருந்தன. அதன் முற்றத்தில் வளைந்த காலையுடைய புன்னைக் கொம்பை வெட்டி அமைத்த பந்தலில் பசுமையான காய்கள் இருந்தன என வலைஞர் இல்லங்கள் பற்றிப் பெரும்பாணாற்றுப் படை தெரிவிக்கிறது.(6)
உழவர் இல்லங்கள்
பெரும்பாணாற்றுப் படையில் உழவர்களின் இல்லங்கள் பற்றிய செய்திகள் சில உள்ளன. வயல் வரப்பிடத்தே புதிய வைக்கோலால் வேயப்பட்டிருந்த கவிந்த குடில் இருந்தது.(7) ஊருக்குள் உழவர்களின் வீடுகளின் பக்கத்தில் மாட்டுக் கன்றுகள் கட்டப்பட்ட முளைகள் நடப்பட்டிருந்தன. ஏணிக்கு எட்டாத நெடிய வடிவுடன், அழியாத தன்மையுடையனவாய் முதிர்ந்த நெற்கூடுகள் உயர்ந்துநின்ற நல்ல இல்லங்களாக விளங்கின.(8)
தோப்புகளில் குடியிருப்போர் இல்லங்கள்
தென்னந்தோப்புகளில் யானையின் உடம்பு போன்ற சொரசொரப்பையுடைய வாடிய தென்னை மட்டைகளால் வேயப்பட்டனவாகவும், முற்றத்தில் மஞ்சளும் பூந்தோட்டங்களும் உடையனவாகவும் தனித்தனி வீடுகளாகக் குடில்கள் இருந்தன.(9) இன்றும் தென்னந்தோப்புகளில் இத்தகைய தனிக்குடில்கள் இருப்பதைக் காண்கிறோம்.
கோவலர் இருக்கை
ஆடு,மாடுகள் மேய்க்கும் இடையர்களின் குடிலில் ஆடுகள் தின்பதற்காகக் கயிற்றில் தழைகளைக் கட்டிய குறுகிய கால்கள் நடப்பட்டிருந்தன. நெருக்கமாகக் குச்சிகளைச் சேர்த்துக் கட்டப்பட்ட சிறிய படலால் ஆன கதவு இருந்தது. வரகுக்கற்றையால் வேயப்பட்டுக் கழிகளால் கட்டப்பட்ட நடமாடும் குடில் அதாவது செல்லுமிடமெல்லாம் தூக்கிச் செல்லக் கூடிய வகையிலமைந்த தங்குமிடம் இருந்தது. பெரிய கூடை போன்ற இக்குடிலை இப்போதும் சிற்றூர்ப்புறங்களில் காணலாம். இது சேக்கை என்று கூறப்படுகிறது. அதில் படுத்தால் உறுத்தாமல் இருக்க, தோலாலான பாய் விரிக்கப் பட்டிருந்தது. ஆடுகளை முற்றத்தில் கட்டுவதற்காகத் தாம்புகளைக் கொண்ட குறுகிய முளைக்குச்சிகளும், முள்வேலிகளும் உடையதாக முல்லைநில ஊர் இருந்தது.(10)
பரதவர் குடியிருப்பு
நெய்தல் நிலத்தில் வாழ்ந்த பரதவரின் குடியிருப்புகள் பற்றிப் பட்டினப்பாலையில் செய்தி உள்ளது. போரில் இறந்த மறவர்க்கு நடும் நடுகல்லைச் சுற்றிலும் வேல்களை ஊன்றி உட்புறமாகக் கிடுகுகளை வேய்ந்து அரண் அமைப்பது போல நெடிய தூண்டிற்கோல் சாத்திய கூரையையுடையதாகக் குடியிருப்பு இருந்தது. அக்குடியிருப்பின் நடுவே நிலவினைச் சேர்ந்த இருள்போல வலைகிடந்து உலரும் மணல் முற்றத்தையுடையதாக மனை இருந்தது. (11)
பரதவர் குடியிருப்புப் பற்றிய செய்தியில் போர்மறவர் நடுகல் காக்கப்பட்டது பற்றிய செய்தியும் அறியக் கிடைக்கிறது.
2. பெரிய வீடுகள்
சிறுசிறு குடிசைகள் இருந்ததைக் கூறியுள்ளது போலப் பெரிய வீடுகளும், மாடங்களைக் கொண்ட வீடுகளும் ஊர்களிலும், நகரங்களிலும் இருந்ததையும் பத்துப்பாட்டு இலக்கியங்கள் எடுத்துக் கூறியுள்ளன.
முல்லை நில ஊர் வீடுகள்
முல்லை நிலத்தின் சிறிய ஊர்களிலுள்ள வீடுகளைப் பற்றிய செய்தி முல்லைப் பாட்டில் உள்ளது. முள்வேலியிட்ட தொழுவங்கள் இருந்தன. அங்கே பெண்யானைகள் நின்றாற்போன்ற குதிர்கள் முற்றத்தில் இருந்தன. வீடுகளின் முன்பு பந்தல்கள் இருந்தன. சிறிய உருளைகளையும்,கலப்பைகளையும் சார்த்தியதால் தேய்ந்த நெடிய சுவர்களைக் கொண்ட இல்லங்களில் கூரைகள் கார்காலத்தில் வேயப்பட்டு அழகுற விளங்கின என்கிறது முல்லைப்பாட்டு.(12)
மழைக்காலம் தொடங்கும்போது ஒழுகாதிருக்கப் புதிய கூரை வேயும் வழக்கம் இருந்துள்ளது என்பது இச்செய்தியால் அறியலாகின்றது.
நெடுநிலை மாடங்கள்
குடிசைகள்,சாதாரண வீடுகள் மட்டுமின்றி, செல்வச் செழிப்புள்ளோரின் மாட மாளிகைகளும் சங்க காலத்தில் இருந்துள்ளன. வானை நோக்கி மிகவும் உயர்ந்த மேல் மாடங்களை உடைய வீடுகள் இருந்தன. அவற்றில் இளவேனிற்காலத்தில் காற்று வருவதற்காகப் பலகணிகள் அமைக்கப் பட்டிருந்தன. மழைக்காலத்தில் அவை திறக்கப்படாமல் தாழிடப் பட்டிருந்தன.(13)
ஒன்றுக்கொன்று நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட படிகளையுடைய நெடிய ஏணிகள் சார்த்தப்பட்ட உயர்ந்த மாடங்களுடைய இல்லங்களும், சுற்றுத்திண்ணைகளையும், பல கட்டுக்களையும், நீண்ட இடைகழிகளையும் (நடவை, ரேழி என இப்போது சொல்லப்படுகிறது) உடையதாக வீடுகள் இருந்தன. அவை முகில்கள் தவழுமளவுக்கு உயரமான மாடங்களும், அவற்றில் தென்றல் வருவதற்காகக் காலதர்கள் (ஜன்னல்கள்) உடையனவாகவும் புகார் நகரத்து வீடுகள் இருந்துள்ளன.(14) கதவுகளில் புலி உருவங்கள் பொறிக்கப்பட்ட செல்வம் தங்கும் மதில்களுடைய அட்டிற்சாலைகளும் இருந்துள்ளன.(15)
மாடங்கள் உயரமாக இருந்ததோடு விசாலமாகவும் இருந்துள்ளன. மேல்நிலை மாடத்தில் மகளிர் பந்து விளையாடிய செய்தி இதைப் புலப்படுத்துகிறது.(16) பொதுவாக நகரங்களில் செல்வம் மிகுந்தவர்களின் வீடுகள் விண்ணுயர்ந்த மாடங்களைக் கொண்டு மதில்கள் சூழப்பட்டனவாக இருந்துள்ளன.(17) மாடமோங்கிய மல்லன் மூதூர் என்கிறது நெடுநல்வாடை.(18)
மதுரை நகரம் தேவர்களின் விண்ணுலகிற்குச் செல்லும்படி கற்களால் கட்டப்பட்ட உயர்ந்த மதிலினைக் கொண்டிருந்தது. அது கோட்டை மதிலாகும். அதன் நெடிய கதவுகளின் நிலையில் கொற்றவை உருவம் செதுக்கப் பட்டிருந்தது. அதற்கு நெய்யிட்டதாலும், விளக்கு இட்டதாலும் கருப்பு நிறமாகிப் போன கதவுகளும் முகில்கள் உலவும் மலைபோன்று உயர்ந்த மாடங்களையும் உடையதாக இருந்துள்ளது.(19)
3.அரண்மனைகள்
குடிமக்கள் அவரவர் தகுதிக்கேற்பக் குடிசைகள்,எளிய வீடுகள், மாட மாளிகைகளில் வாழ்ந்ததைப் போல அரசர்களின் தகுதிக்கேற்ப அவர்களது அரண்மனைகள் சிறப்புற இருந்துள்ளன.அரண்மனைகளைப் பற்றிய செய்திகள் சிறுபாணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, முல்லைப்பாட்டு ஆகிய இலக்கியங்களில் கிடைக்கின்றன.
நல்லியக்கோடனுடைய ஊரான ஆமூர் அரிய காவலையும், அகன்ற வீடுகளையும், அகழியையும் உடையதாக இருந்தது. அவ்வரசனின் அரண்மனை மேருமலை கண்ணைத் திறந்து பார்த்ததைப் போன்ற பெரிய வாயிலை உடையதாக இருந்தது.(20)
முல்லைப்பாட்டில் கூறப்படும் அரண்மனை தனக்குரிய இடமெல்லாம் பொன்னாலும், மணியாலும் சிறப்புப் பெற்ற உயர்ந்த ஏழடுக்கு மாளிகை. அதில் மழை பொழியும் போது திரண்ட மழைநீர் வாயிலில் அருவியாக விழுந்து இனிய ஓசையை எழுப்பியது.(21)
நெடுநல்வாடையில் அரண்மனை பற்றிய செய்திகள் சிறப்பாக உள்ளன. நெடுநிலை மாடத்தின் கதவுகள் இரும்பு ஆணிகளையும், பட்டங்களையும் கொண்டு பிணித்து அதற்கு சிவப்பு நிற அரக்கைக் கொண்டு நிறம் சேர்க்கப் பட்டிருந்தது. இரண்டு மரங்களைச் சேர்த்துச் செய்யப் பட்ட கதவுகள் என்பது தெரியாதபடி ஒரே மரம் என்பதுபோலக் கைவினைத் திறத்தால் அமைத்திருந்தனர். குவளைமலர் உருவமும், புதுமையான கைப்பிடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
உத்தரத்தில் நடுவில் திருமகள் உருவமும், இருபுறமும் செங்கழுநீர்ப் பூக்களும், நீராட்டும் இரண்டு யானைகளின் உருவங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. இந்த அமைப்பு இப்போது பல கோயில்களில் உள்ளதைக் காண்கிறோம்.
அரண்மனை வாயிலானது, வெற்றிக் கொடியை உயர்த்தியபடியே யானையின் மீது அமர்ந்து கொண்டு உள்ளே புகுமளவுக்கு உயரமாகவும், மலையின் நடுவே வெளியாகக் குடைந்து திறந்தது போன்ற கோபுர வாயிலாகவும் இருந்தது.
மனைகளோ, மலைகளைப் போன்று உயரமாக இருந்தன. அதன் சுவர்கள் வெள்ளியைப் போன்ற சுதை பூசப்பட்டிருந்தன. தூண்கள் நீலமணியைப் போலக் கருமையாகத் திரண்டிருந்தன. செம்பினால் செய்யப் பட்டது போன்ற நெடிய சுவர்களில் அழகிய பல பூக்களையுடைய ஒப்பற்ற பூங்கொடி ஓவியங்கள் விளங்கின.(22)
4.கலங்கரை விளக்கம்
பண்டைத் தமிழர் கடல்கடந்து வணிகம் செய்வதிலும், மீன்பிடி தொழிலிலும், முத்துக் குளித்தலிலும் சிறந்து விளங்கியவர்கள். கடலில் தொழில் செய்வோர்க்குக் கரை திரும்ப உறுதுணையாக இருப்பது கலங்கரை விளக்கம்.
பண்டைத் தமிழகத்திலும் மிக உயர்ந்த கலங்கரை விளக்கங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. வானம் கீழே விழாதபடி முட்டுக் காலாக ஊன்றி வைத்த ஒரு பற்றுக்கோலைப் போல, விண்ணைத் தூண்டும்படி உயர்ந்திருந்தது. அதில் ஏணி சார்த்தியிருந்தது. அதன் உச்சிப்பகுதி ஏறுவதற்கு அரியதாக இருந்தது. அதன் கூரை ஓலைக் கற்றைகளால் வேயப்படாமல் சுண்ணச் சாந்திட்டதாக இருந்த மாடத்து உச்சியில் விளக்கு ஏற்றி வைக்கப் பட்டிருந்தது என்ற செய்தி பெரும்பாணாற்றுப்படையில் கிடைக்கிறது.(23)கலங்கரை விளக்கம் வாழ்மனை அல்ல என்றாலும் பண்டைத் தமிழர் கட்டடக் கலை நுட்பத்தை எடுத்துரைக்க இங்கு கூறப்பட்டது.
5. பாசறைகள்
போருக்குச் செல்லும் மன்னர்களும், படையினரும் போர்க்களத்தே பாசறை அமைத்துத் தங்குவது வழக்கம். அப்படித் தங்கும் பாசறைகள் எப்படியிருந்தன என்பதை முல்லைப்பாட்டு விளக்கமாகக் கூறுகிறது.
கடல் போல் பரந்து கிடக்கும் போர்க்களப் பாசறையில் முள் வேலியாகிய மதில் அமைக்கப் பட்டு, தழைகளால் வேயப்பட்ட கூரையுடன் பாசறைகளிருந்தன.(24)
மறவர் அரண்
படை மறவர்களின் பாசறை இருக்கைகளில் வலிய வில்லை ஊன்றி, அவற்றின்மேல் தூணிகள் தொங்கவிடப் பட்டிருந்தன. கூடமாகக் கால்களை நட்டுக் கயிற்றாலே வலித்துக் கட்டின இருப்பிடத்தில் குந்தக் கோல்களை ஊன்றி ஓலை அல்லது இலைகளாலான கிடுகுகளை நிரல்படப் பிணைத்து அந்த இருக்கைகள் அமைக்கப்பட்டன.(25)
அரசனின் தனி இருக்கை
அரசனுக்கென வசதியானதும், பாதுகாப்பு மிக்கதுமான தனி இருக்கை அமைக்கப் பட்டிருந்தது. நெடிய குத்துக் கோலுடன் பல நிறங்களைக் கொண்ட திரையை வளைத்து அரசனின் பாசறை அமைக்கப் பட்டிருந்தது. இன்றும் பல நிறங்களைக் கொண்ட துணிகளால் கூடாரங்களும், தற்காலிகப் பந்தல்களும் அமைப்பதை நேரில் காண்கிறோம், சங்க காலத்திலேயே இவ்வழக்கம் இருந்துள்ளதை முல்லைப்பாட்டு நமக்குத் தெரிவிக்கிறது.
அரசனின் பாசறை இரண்டு அறைகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது. காவல் மற்றும் ஆலோசனைக்கு முன் அறையும், துயில் கொள்ளும் படுக்கை அறை ஒன்றுமாக அந்த இரு அறைகள் இருந்தன,(26)
6. கால்கோள் விழா
இல்லமோ, அலுவலகமோ, தொழிற்சாலையோ எதுவாயினும் ஒரு கட்டடம் கட்டத் தொடங்கும் போது அதற்கு ஒரு நல்ல நாள் பார்த்துக் கால்கோள் செய்வது நம் நாட்டில் இன்றும் நடைமுறையிலுள்ள ஒரு மரபு ஆகும். சங்க காலத்திலும் நாள், நேரம், பார்த்துக் கால்கோள் செய்யும் வழக்கமிருந்ததை நெடுநல்வாடை தெரிவிக்கிறது.
சித்திரைத் திங்களில் பத்தாம் நாள் தொடங்கி இருபதாம் நாள் முடிய உள்ள நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் பகல் 15 நாழிகையளவில் ஞாயிற்று மண்டலம் நிலத்தின் நடுவண் பகுதியில் இயங்கும். இதை அறிய இரண்டு கோல்களை நிலத்தில் நட்டு வைப்பர். இக்கோல்களின் நிழல் வடக்கிலோ, தெற்கிலோ சாயாமல் அக்கோல்களிலேயே 15 நாழிகையில் அடங்கி நிற்கும். அந்த நாளில் அந்த நேரத்தை ஆய்ந்தறிந்து அவ்வேளையில் அரசர்களின் அரண்மனை கட்டுவதற்கான திருமுளைச் சாந்து என்னும் தொடக்கவிழாச் சடங்கினைச் செய்வர்.(27)

சங்ககாலத் தமிழர்கள் அவரவர் வாழும் நிலங்கள், சூழ்நிலைகள் ஆகியவற்றிற்கேற்ப இல்லங்கள் அமைத்து வாழ்ந்திருக்கின்றனர், ஆனால் அவை அவர்களுக்கு நிறைவளிக்கும் வகையில் இருந்ததாகவே கருத வைக்கும் வகையில் பத்துப்பாட்டு இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் உள்ளன.

அடிக்குறிப்புகள்: 1. குறிஞ்சிப்பாட்டு, அடி - 153.
2. சிலப்பதிகாரம், காடுகாண்காதை 64-66.
3. மதுரைக்காஞ்சி - 310.
4. சிறுபாணாற்றுப்படை, 173 - 174.
5. பெரும்பாணாற்றுப்படை, 122 - 127.
6. மேலது, 263 - 267.
7. மேலது, 243 - 247.
8, மேலது, 225.
9. மேலது, 351 - 355.
10. மேலது, 147 - 154.
11. பட்டினப்பாலை, 78 - 83,
12. பெரும்பாணாற்றுப்படை, 184 - 191. 13. நெடுநல்வாடை, 60 - 63.
14. பட்டினப்பாலை, 142 - 145, 151.
15. மேலது, 40 - 43.
16. பெரும்பாணாற்றுப்படை, 327- 333.
17. மேலது, 369
18. நெடுநல்வாடை, 29.
19. மதுரைக்காஞ்சி, 352-355.
20.சிறுபாணாற்றுப்படை, 187-188, 205-206.
21. முல்லைப்பாட்டு, 86-88.
22.நெடுநல்வாடை, 80-88, 108-114.
23. பெரும்பாணாற்றுப்படை, 346-350.
24. முல்லைப்பாட்டு, 27-29.
25. மேலது, 39-42.
26.மேலது, 43-44, 64.
27.நெடுநல்வாடை, 73-78.