Sunday, July 29, 2012

வேளாண்மையில் இன்றுள்ள சிக்கல்களும் தீர்வுகளும்


வேளாண்மைத் தொழில் முன் எப்போதைக் காட்டிலும் தற்போது பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. அவற்றில் சில சிக்கல்கள் முதன்மையானவையாக உள்ளன.
வேளாண்மைத் தொழிலில் உள்ள ஏராளமான சிக்கல்களில் வேலைக்கு ஆள் கிடைக்காமை விளைபொருள்களுக்கு உரிய விலையின்மை நீர்வளம் தடுக்கப் படுதல் செயற்கை உரங்களாலும் பெரும் நிறுவனங்களாலும் நிலம் நீர் மாசடைதல் உரங்கள் விலையேற்றம் மற்றும் அவை கிடைக்காமை காட்டு விலங்குகளால் விளைபொருள்கள் அழிவு பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையடிப்பு வேளாண்மைக்கு அரசு முக்கியத்துவம் தராமை ஒட்டு ரகங்களால் நோய்த்தாக்குதல் பருவநிலை மாற்றம் முதலிய சிக்கல்களை முதன்மையானவையாகக் குறிப்பிடலாம்.
இந்தச் சிக்கல்களைத் தீர்க்கும் வழிமுறைகள் சில உள்ளன. முதலில் வேளாண்மை இயந்திர மயமாக்கப் பட வேண்டும். அதற்கு வேண்டிய பொறிகளை வேளாண் பல்கலைக் கழகமும் திறமையுள்ள அறிஞர்களும் விவசாயிகளும் கண்டுபிடிக்க வேண்டும். அவற்றுக்கு இயற்கை எரிபொருள்களே பயன்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு வேளாண்மை பாடமாக வைக்கப்பட்டு விளை நிலங்களில் மாணவர்களுக்குப் பயிற்சி தந்தால்தான் வேளாண்மையைக் கேவலமாகக் கருத மாட்டார்கள்.
விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய அரசு விவசாயி வணிகர் அடங்கிய முத்தரப்புக் குழு அமைக்கப் பட்டு அதன்மூலம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆறுகளை தேசிய மயமாக்கி தேசியக் குழுவால் நீர்ப்பாசனத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் அல்லது ஆற்றுநீர்ச் சிக்கலால் மிகவும் பாதிக்கப்பட்ட தமிழக எல்லைகளைத் திருத்தியமைக்க வேண்டும்.
செயற்கை உரங்களைத் தவிர்த்து இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை அறிவியலாளர்களின் வழிகாட்டுதலை மேற்கொள்ள வைக்க வேண்டும். வேளாண் பல்கலைக் கழகங்களும் இயற்கை வேளாண்மையில் அக்கறை கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
காட்டு விலங்குகளான யானைகள் மற்றும் காட்டுப் பன்றிகளால் விளைபொருள்களுக்குப் பெரும் சேதங்கள் ஏற்படுகின்றன. இவற்றைத் தடுக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். யானைகளின் வழித்தடங்கள் மறிக்கப் படுகின்றன என்பதைவிட அவை தொல்லையில்லாமல் பயிர்களைத் தின்று பழகி விட்டன என்பதே உண்மை. இவற்றைத் தடுக்க காட்டுப் பகுதிகள் முழுமைக்கும் மின்வேலி அமைப்பதுடன் தொடர்ந்து அவற்றைப் பராமரிக்க வேண்டும். பெருகிவரும் காட்டுப் பன்றிகளை விவசாய நிலங்களில் புகும்போது அவற்றை வேட்டையாட அனுமதிக்க வேண்டும்.
பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் சந்தையாக இந்தியாவை மாற்ற மரபணு மாற்று விதைகளைக் கொண்டு வருகின்றன. இவற்றை அரசு முழுமையாகத் தடை செய்து விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும். வேளாண்மைக்கு அரசு எந்த முக்கியத்துவமும் தருவதில்லை. உணவு உற்பத்தி வேண்டுமெனில் பசுமைக்குடில் சொட்டுநீர்ப் பாசனம் உழவுப்பொறிகள் மற்றும் பிற கருவிகளனைத்திற்கும் அரசு மானியங்கள் மிகுதியாகத் தர வேண்டும். கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு ஊதியம் தரத் திட்டமிட்டதாகச் செய்திகள் வெளியாயின. அது நடைபெற்றதாகத் தெரியவில்லை. ஆனால் அத்திட்டம நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
ஒட்டு ரகங்களை விடுத்து நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவையும் இந்த மண்ணின் தன்மைக்கு ஏற்றவையுமான இந்த நாட்டுப் பாரம்பரிய விதைகளை விதைப்பதே நல்லதாகும்.
பருவநிலை மாற்றத்தைச் சரிசெய்ய அரசும் பொதுமக்களும் செய்ய வேண்டிய பணிகளுடன் விவசாயிகளும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன. மரம் வளர்ப்பை அரசு தீவரமாகச் செயல்படுத்த வேண்டும். பெரும்பாலான விவசாயிகள் மரங்களை வளர்ப்பதில் போதிய அக்கறை இல்லாதவர்களாக உள்ளனர். இந்நிலை மாற வேண்டும். குறைந்தது ஓர் ஏக்கருக்கு ஒரு மரமாவது வளர்க்க வேண்டும்.

நேர்மையின் இலக்கணம் கக்கன்


பொதுவாழ்வில் தூய்மையானவர்களைக் காண்பது அரிதாக உள்ள இன்றைய நிலையில், தூய்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அப்பழுக்கற்ற தலைவர்கள் பலர் நம் முந்தைய தலைமுறையில் இருந்திருக்கிறார்கள் என்பதை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.
காந்தியடிகள் வழிநடந்த தொண்டர்களாக இருந்த பலர், நாடு விடுதலை பெற்றபின் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து மக்கள் பணி செய்த போதும் தங்கள் செயல்களில் நேர்மை தவறாமல் நடந்தனர்.  அத்தகைய தூயவர்களில் ஒருவராக, நாடு போற்றும் நல்லவராக விளங்கிய ஒருவர்தான் எளிமையின் இலக்கணம், தூய்மையின் இருப்பிடம் என்று போற்றப்பட்ட திரு. கக்கன் அவர்களாவார்.
எதிர்க்கட்சியினராலும் போற்றப்பட்டவரான திரு. கக்கன் 1957 இல் பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில் வேளாண்மை, கால்நடை, தாழ்த்தப் பட்டோர் நலம், பொதுப்பணி ஆகிய துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார்.
1962 இல் மீண்டும் அமைந்த காமராஜர் அமைச்சரவையில் வேளாண்மை, உணவு, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை, தாழ்த்தப்பட்டோர் நலன் ஆகிய துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார்.
காமராஜர் பதவி விலகியபின் திரு. பக்தவத்சலம் தலைமையிலான  அமைச்சரவையில் உள்துறை, காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை, தொழிலாளர் நலத்துறை, அறநிலையத்துறை, தாழ்த்தப்பட்டோர் நலத்துறை எனப் பெரும் பொறுப்புகள் கொண்ட பல துறைகளின் அமைச்சராகத் திறம்படப் பணியாற்றினார்.
பத்தாண்டுக் காலம் மாநில அமைச்சராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கியவராயினும் கறைபடியாத கைகளுக்குச் சொந்தக் காரராகவே செயல்பட்டதால், இறுதிவரை எளிய வாழ்க்கையே வாழ்ந்த சிறப்புக்குரியவர் கக்கன் அவர்கள்.
இவரது வாழ்க்கை பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளோருக்கும், ஈடுபட விரும்புவோருக்கும் ஒரு வழிகாட்டி என்றால் அது மிகையாகாது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் 18.6.1909 இல் பிறந்தவர் திரு. கக்கன். இவரது தந்தையார் பூசாரிக்கக்கன். தாயார் குப்பி அம்மையார்.
கக்கன் என்பது அவர்களது குலதெய்வப் பெயராக இருக்கலாம் என்பர். ஆண்களுக்குக் கக்கன் என்றும், பெண்களுக்குக் கக்கி என்றும் பெயர் சூட்டும் வழக்கம் உண்டென்பர். அப்பகுதியில் வீரகாளியம்மன் கோவில் பூசாரிக்குடும்பத்தைச் சேர்ந்தவர் பூசாரிக்கக்கன். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வருவாய்த்துறை அதிகாரிக்கு ஊர்ப்புற உதவியாளராகப் பணியாற்றியவர்.
இளமையிலேயே தன் தாயை இழந்தார் கக்கன். தனக்குச் சிற்றன்னையாக வந்த பிரம்பியம்மாள் என்னும் அம்மையாரால் வளர்க்கப் பட்டார்.
கக்கனின் தந்தையார் பூசாரிக்கக்கன் தன் பணிகள் தொடர்பாகப் பல்வேறு அதிகாரிகளைப் பார்த்ததால், தன் மகனையும் படிக்க வைத்து ஓர் உயர் அதிகாரியாக்க ஆசைப்பட்டார்.
தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடிய காலம் அது. தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த துயரமான சூழ்நிலையில் ஏழ்மை, தீண்டாமைக் கொடுமை ஆகிய இடர்ப்பாடுகளுக்கிடையே எதிர்நீச்சல் போட்டுத் தொடக்கக் கல்வியைப் பயின்றார்.
உயர்நிலைப் பள்ளிப் படிப்பை மதுரை திருமங்கலத்திலும், மேலூரிலும், பசுமலையிலும் படித்தார். விடுதலைப் போராட்ட வீரரான வைத்தியநாத ஐயர் மற்றும் அவரது நண்பர்கள் உதவி செய்தனர். அதன்படி அரிசன சேவா சங்க உதவித்தொகை பெற்று உயர் கல்வியைத் தொடர்ந்தார். எனினும் பள்ளி இறுதித் தேர்வில் (எஸ்.எஸ்.எல்.சி) ஆங்கிலப் பாடத்தில் வெறும் ஒரு மதிப்பெண் குறைவாகப் பெற்றதால் தோல்வியடைந்தார். மீண்டும் படித்தும் அவரால் வெற்றிபெற முடியவில்லை.
கல்வி பயின்ற காலத்திலேயே நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்களின் தொடர்பு ஏற்பட்டிருந்ததால் அவருக்குக் கல்வியில் தொடர்ந்து ஈடுபாடு ஏற்படவில்லை. வைத்தியநாத ஐயர், என். எம். ஆர். சுப்பராமன் முதலியோர் நடத்திவந்த அரிசன சேவா சங்கத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஏற்புடையவராகக் கக்கன் விளங்கியதால் அவரைச் சங்கத்தின் தொண்டராகச் சேர்த்துக் கொண்டனர். அதிலிருந்து கக்கனின் தூய பொது வாழ்வு தொடங்கியது.
முதலில் மதுரை மேலூரில் உள்ள மாணவர் விடுதிக் காப்பாளராகப் பணியைத் தொடங்கினார். பின் சேவா சங்கத்தின் கல்விப் பணிகளில் ஈடுபட்டார். ஒவ்வொரு சிற்றூருக்கும் சென்று தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளில் இரவுப் பள்ளிகளைத் தொடங்கினார். அப்பள்ளிகளை மேற்பார்வை செய்வதும், பள்ளிகளுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுப்பதும் இவரது பணிகள். இதற்காக வைத்தியநாத ஐயரும், அவரது நண்பர்களும் தரும் பணத்திற்கு முறையான கணக்குகளைப் பராமரித்து அவர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.
1934 இல் மதுரைக்கு வந்த காந்தியடிகள் கக்கனின் பொதுத் தொண்டுகளை அறிந்தார். அந்தச் சந்திப்பின்போது, காந்தியடிகளுடன் சுற்றுப்பயணம் செய்த கக்கன் காந்தியக் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
இதன் காரணமாக, 1939 ஆம் ஆண்டு வைத்தியநாத ஐயர் மூலம் காங்கிரசில் இணைந்து பொதுத்தொண்டுகளுடன் விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார்.
அவர் போகுமிடமெல்லாம் வந்தே மாதரம் முழக்கமிட்டதற்காக 1940 இல் ஆங்கில அரசால் 15 நாள்கள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப் பட்டார். அந்த 1940 இல்தான் அவர் மேலூர் வட்டக் காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
காந்தியடிகள் அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னிந்தியாவைச் சேர்ந்த தலைவர் கக்கன்தான் என்பது பெருமைக்குரிய ஒன்று. இந்தப் போராட்டத்திற்காகவும் ஒரு மாதச் சிறைத்தண்டனை பெற்றார்.
1942 இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட கக்கன், வெள்ளையக் காவல் துறையினரால் கொடூரமாகத் தாக்கப் பட்டார். செய்யாத குற்றங்களையெல்லாம் அவர்மீது சுமத்தி விசாரணை ஏதுமின்றிக் கடுங்காவல் தண்டனை வழங்கியது ஆங்கில அரசு. ஒன்றரை ஆண்டுக் கடுங்காவல் தண்டனையை ஆந்திர மாநிலத்திலுள்ள அலிப்பூர் சிறையில் அனுபவித்தார்.
அவரது அரசியல் வாழ்வில் பல பதவிகள் அவரைத் தேடி வந்தன. முதலில் 1941- 42 இல் நடைபெற்ற மாவட்டக் கழக உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1946 இல் அரசியலமைப்புச் சட்டசபை உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.
நாட்டு விடுதலைக்குப்பின் 1952 இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1957 மற்றும் 1962 ஆகிய தேர்தல்களில் தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமைச்சர் பொறுப்பேற்றுப் பல் நற்பணிகளைச் செய்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் பணியாற்றினார். இவர் தலைவராக இருந்த போதுதான் 1955 இல் காங்கிரஸ் கட்சியின் அனைத்திந்திய மாநாட்டைச் சென்னையில் சிறப்புற நடத்தினார்.
1963 இல் காமராஜர் கட்சிப்பணிக்காக முதல்வர் பதவியிலிருந்து விலகியபோது, அடுத்த முதல்வராகக் கக்கனையே கொண்டுவர விரும்பினார் என்று கூறப்படுகிறது. ஆனால், திரு. பக்தவத்சலம் அவர்கள் முதல்வரானார். அவரது அமைச்சரவையில் நிதி, உள்துறை, கல்வி, சிறை, அறநிலையத்துறை, தொழிலாளர் நலம், தாழ்த்தப்பட்டோர் நலம் முதலிய பல பெரும் பொறுப்புகள் கொண்ட அமைச்சராகத் திறம்படப் பணியாற்றினார் கக்கன்.
1967 இல் தி.மு.க. ஆட்சியமைத்த போது கக்கன் அவர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அத்துடன் அவரது அரசுப் பணிகள் முடிவுக்கு வந்தன. ஆனால், கட்சிப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டார்.
பத்தாண்டுக்காலம் அமைச்சர் பதவியில் இருந்தபோதும், அவருக்கென்று சொந்த வீடோ, வேறு சொத்துக்களோ வைத்திருக்கவில்லை. விடுதலைப் போரில் ஈடுபட்டமைக்காகத் தமக்குக் கிடைத்த சிறு நிலத்தையும் வினோபாவின் பூதான இயக்கத்திற்குக் கொடுத்து விட்டார்.
அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின் சொந்தமாக ஊர்தி ஏதுமில்லாததால், ஒரு முன்னாள் அமைச்சர் பேருந்துக்காகக் கால் கடுக்கக் காத்திருந்ததையும், வாடகை வீடு தேடி அலைந்ததையும், இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த போது மதுரை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகூட இல்லாமல் தரையில் படுத்துக் கிடந்ததையும், அதையறிந்த அன்றைய முதல்வர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தததையும் தமிழக மக்களில் பெரும்பாலோர் அறிவர். அதனால்தான் கக்கன் என்றாலே அவர் தூய்மையின் அடையாளமாக மதிக்கப் படுகிறார்.
அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்த போதும் அவரது துணைவியார் ஆசிரியைப் பணி செய்தே குடும்பத்தைக் கவனித்தார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் அவரது தந்தையார், தான் செய்து வந்த வருவாய்த்துறை ஊர்ப்புற உதவியாளர் பணியைச் செய்தே வாழ்க்கை நடத்தினார்.
இவர் அமைச்சராக இருந்தபோது பல்வேறு பொதுநலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். அவற்றில் குறிப்பிடத் தக்கவை மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தது, வைகை, பாலாறு உள்ளிட்ட பல அணைக்கட்டுத் திட்டங்களை நிறைவேற்றியது, விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான பணிகளைக் கூறலாம்.
அவர் நாடாளமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பணியாற்றிய போது அவை நடவடிக்கைகளில் தவறாது பங்கேற்பது இவருடைய சிறந்த பழக்கமாக இருந்தது. நேரம் தாழ்த்தாமல் அலுவலகத்திற்கு வருவதும், மக்கள் குறைகளைக் கேட்டு ஆவன செய்வதும் இவருடைய பண்பு நலன்களில் குறிப்பிடத்தக்கவை.
தீண்டாமை ஒழிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த கக்கன் அதற்காகப் பல்வேறு செயல்பளைச் செய்துள்ளார். அவரது ஊரான தும்பைப் பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்கள் நீரெடுக்க ஒரு குளமும், பிற வகுப்பார் நீரெடுக்க ஒரு குளமும் இருந்தன. தாழ்த்தப்பட்ட வகுப்பார் நீரெடுக்கும் குளம் மக்கள் அசுத்தங்களைக் கழுவவும், ஆடு மாடுகளைக் குளிப்பாட்டவும் பயன்படுத்தப்பட்ட குளமாகும்.
இந்த இழிநிலையை எதிர்த்து ஒத்த கருத்துடைய பிற வகுப்பாருடன் இணைந்து போராடி அனைவரும் ஒரே குளத்தில் குடி நீரெடுக்கும் உரிமையைப் பெற்றுத்தந்தார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் கோவில் நுழைவுப் போராட்டத்தை வைத்தியநாத ஐயருடன் சேர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 1939 இல் நடத்தித் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலில் நுழைந்து வழிபாடு செய்யும் உரிமையைப் பெற்றுத்தந்தார்.
கக்கன் இந்துவாக இருந்தாலும் கிறித்தவ சமயத்தைச் சேர்ந்த சொர்ணம் பார்வதி என்ற அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். அதுவும் 1932 இலேயே சீர்திருத்தத் திருமணம் செய்தார். இந்தத் திருமணத்திற்குத் தலைமை தாங்கியவர் பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் பா. ஜீவானந்தம் என்பது குறிப்பிடத் தக்கது.
தந்தை பெரியார் இந்துக்களின் வழிபடு கடவுளான இராமபிரானின் உருவப் படத்தை எரிக்க முற்பட்ட போது, அதைக் கண்டித்தார். மீறி எரித்தபோது அதற்காக அவரைச் சிறையிலும் அடைத்தார்.
இறுதிவரை ஏழ்மையிலேயே வாடிய கக்கன் நோய்வாய்ப்பட்ட போது உயர் ரக சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள வசதியின்றி சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். நினைவிழந்த நிலையில் இரு மாதங்கள் இருந்த அவர், 1981 டிசம்பர் 23 ஆம் நாள் உலக வாழ்வை நீத்தார்.
அமைச்சர் பதவியிலிருந்த காலத்தில் தனது பதவியை அவர் ஒருமுறைகூட முறைகேடாகப் பயன்படுத்தியதில்லை. அரசு தனக்கு ஒதுக்கியிருந்த வீட்டில் தமது நெருங்கிய உறவினர்களைக்கூடத் தங்குவதற்கு அனுமதித்தில்லை. அதே போல, அரசு தனக்குத் தந்த ஊர்தியில் தன் குடும்பத்தார் பயணம் செய்யவும் அனுமதித்தில்லை.
இப்படிப்பட்டவர் வாழ்ந்த நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பது நமக்குப் பெருமை. எதிர்காலத் தமிழகத்தை ஏற்றமுறச் செய்யவுள்ள இளைய தலைமுறைக்குக் கக்கனின் தூய பொதுவாழ்வு ஓர் எடுத்துக்காட்டு.

Saturday, March 31, 2012

கொங்கு நாட்டில் கண்ணகி வழிபாடு


சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் காப்பியத்தின் மையப் பொருளாக, கதையைக் கூற வந்த நோக்கமாக எடுத்தியம்புவது, பத்தினியை மேலோர் போற்றி வணங்குவர் என்பதாகும். உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் என அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பத்தினித் தெய்வமாகிய கண்ணகி மாரியம்மனாகத் தமிழகம் எங்கும் வணங்கப் படுகிறாள்.
கோவலன் மதுரையில் கொல்லப்பட்டு, அம்மூதூர் கண்ணகியால் எரியூட்டப்பட்ட பின்னர் பல ஆண்டுகள் மழை வளமின்றி வறண்டுபோக, பின்னர் வந்த பாண்டிய மன்னன் மழை வேண்டிக் கண்ணகிக்குக் கோயில் எடுத்து வழிபட, நாடு மழை வளம் பெற்றுச் செழித்ததாம்.
மாரி என்றால் மழை. மழைக்காக வழிபடப்பட்ட அம்மன் மாரியம்மன். தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களில் மாரியம்மன் கோயில்கள் இருப்பதைப் பார்க்கிறோம். பின்னாளில் இது சக்தி வழிபாடாகக் கொண்டாடப் பட்டாலும் மாரியம்மன் வழிபாட்டின் தொடக்கம் கண்ணகி வழிபாடே!
கொங்கு நாட்டிலும் பெரும்பாலான ஊர்களில் மாரியம்மன் கோயில்கள் உள்ளன. கோவை மாநகரின் மையப்பகுதியில் தண்டு மாரியம்மன் கோயில் உள்ளதைக் கோவை மக்கள் அனைவரும் அறிவர்.
வறட்சியான கோடைக் காலங்களில் மழை வேண்டி மாரியம்மனுக்குத் திருவிழா நடத்தப் படுவது வழக்கமாக உள்ளது. இது ஆதியில் நடைபெற்ற கண்ணகி வழிபாட்டை எடுத்துக் காட்டுகிறது.
திருவிழாவின் போது கோயிலின் முன்புறத்தில் முக்கொம்புக் கம்பத்தில் பூவோட்டில் எரி வளர்ப்பதும், பக்தர்கள் பூவோட்டில் தீயேந்தி வருவதும் மதுரையைக் கண்ணகி எரியூட்டியதைப் போற்றுவதாக இருக்கலாம்.
தேனி மாவட்டத்திற்கு அருகில் தேசியத்திற்காகத் தமிழகம் கேரளத்திடம் இழந்த பகுதியிலுள்ள மங்கலதேவி கோயிலைச் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கட்டிய கோயிலென்று ஆண்டுதோறும் தமிழக மக்கள் சென்று வழிபட்டு வருகின்றனர்.
கொங்கு நாட்டிலும் கண்ணகி மங்கல தேவியாக வழிபடப் படுகிறாள்.
கோவை மாவட்டம் ஆலாந்துறைக்கு அருகிலுள்ள நாதகவுண்டன்புதூரிலிருந்து வடிவேலாம்பாளையம் செல்லும் சாலையில் மங்கலம்மன் கோயில் ஒன்றுள்ளது. இது இப்பகுதியைச் சேர்ந்த ஏழு ஊர் மக்கள் விழா எடுத்துக் கொண்டாடும் கோயிலாகும். இப்பகுதி கொங்கு நாட்டின் மேற்கெல்லைப் பகுதியாகும்.
இக்கோயிலில் சுடுமண்ணால் செய்யப்பட்ட யானை மற்றும் குதிரைச் சிற்பங்கள் மிகப்பெரிய அளவில் முன்னர் நிறைய இருந்தன. பாதுகாப்பற்ற நிலையில் தற்போது அவை அழிந்து விட்டன.
இக்கோயில் திருவிழாவிற்கு நாதகவுண்டன்புதூருக்குத் தென்மேற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியிலுள்ள மங்கலம்மன் சோலை என்னும் அடர்ந்த காட்டிலிருந்துதான் கரகம் கொண்டு வருவார்கள். அதைக் கொண்டுவரும் உரிமை அப்பகுதியிலுள்ள மலைவாழ் பழங்குடி மக்களுக்கே உரியது. ஆனால் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இக்கோயில் திருவிழா நடத்தப் படவில்லை.
மலையுச்சியிலுள்ள மங்கலம்மன் சோலையிலும் ஒரு மங்கலம்மன் கோயில் உள்ளது. திறந்த வெளியில் நடுகற்களைத் தெய்வமாக வழிபடுபவர்கள் இந்த மங்கலம்மன் சோலையையொட்டியுள்ள பாறைப்பட்டி என்னும் மலைக் குடியிருப்பைச் சேர்ந்த பழங்குடி மக்களும், நாதகவுண்டன்புதூர் மக்களுமாவர். தற்போது பாறைப்பட்டியைச் சேர்ந்த பெரும்பாலான பழங்குடி மக்கள் இடம் பெயர்ந்து விட்டனர்.
மங்கலம்மன் சோலையில் ஒவ்வோராண்டும் சித்திரைத் திங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதில் ஆடுகளை உயிர்ப்பலி தரும் வழக்கம் உள்ளது.
மங்கலம்மன் சோலைக் கோயிலுக்குக் கிழக்கில் உள்ளது பாறைப்பட்டி. அதற்கும் கிழக்கில் கோபாலசாமி கோயில் என்னும் மலை வழிபாட்டிடம் ஒன்று உள்ளது. இது வட்டமாகப் பரந்திருக்கும் ஒரு பாறைப் பரப்புத்தான். இது கோபாலசாமி கோயிலா, கோவலன்சாமி கோயிலா என்பது ஆய்வுக்குரியது. பண்டை நாட்களில் ஆடு, மாடு மேய்க்கும் மக்களால் கோபாலசாமியாகத் திருமால் வழிபடப் பட்டிருக்கலாம் என்பது ஒரு கருத்து.
ஆனால்,  அருகிலுள்ள மங்கலம்மனை மங்கலதேவி எனப் போற்றப்படும் கண்ணகிதேவி வழிபாடெனக் கொண்டால் இதனைக் கோவலன்சாமி கோயிலாகக் கருதலாம். சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம் குன்றக்குரவையில் மலைவாழ் பழங்குடி மக்கள் தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே எனக் கண்ணகியைத் தெய்வமாக வழிபடத் தொடங்கியதாகக் கூறப் பட்டுள்ளதை, இது கண்ணகி வழிபாடெனக் கொள்வதற்குச் சான்றாகக் கொள்ளலாம். எனவே மலைவாழ் மக்கள் இங்கும் கண்ணகியை வழிபடும் வாய்ப்புகள் உண்டு.
கண்ணகி கோவலனுடன் வானுலகம் சென்ற செய்தியைச் சேரன் செங்குட்டுவனுக்கு மலைவாழ் மக்கள்தான் கூறியதாகச் சிலப்பதிகார வஞ்சிக் காண்டம் காட்சிக்காதையில் செய்தி உள்ளது. சேரன் செங்குட்டுவன்  கண்ணகிக்காக இமயத்தில் கல்லெடுத்துவரப் படையுடன் சென்றபோது இந்தப்பகுதி வழியாகத்தான் சென்றிருக்க வேண்டும் என முனைவர் ந. இரா. சென்னியப்பன் அவர்கள் கூறுகிறார்.
எனவே கொங்கு நாட்டில் வழிபடப்படும் மங்கலம்மனும், மாரியம்மனும் கண்ணகிதேவியே எனக் கருதலாம்.