Saturday, March 31, 2012

கொங்கு நாட்டில் கண்ணகி வழிபாடு


சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் காப்பியத்தின் மையப் பொருளாக, கதையைக் கூற வந்த நோக்கமாக எடுத்தியம்புவது, பத்தினியை மேலோர் போற்றி வணங்குவர் என்பதாகும். உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் என அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பத்தினித் தெய்வமாகிய கண்ணகி மாரியம்மனாகத் தமிழகம் எங்கும் வணங்கப் படுகிறாள்.
கோவலன் மதுரையில் கொல்லப்பட்டு, அம்மூதூர் கண்ணகியால் எரியூட்டப்பட்ட பின்னர் பல ஆண்டுகள் மழை வளமின்றி வறண்டுபோக, பின்னர் வந்த பாண்டிய மன்னன் மழை வேண்டிக் கண்ணகிக்குக் கோயில் எடுத்து வழிபட, நாடு மழை வளம் பெற்றுச் செழித்ததாம்.
மாரி என்றால் மழை. மழைக்காக வழிபடப்பட்ட அம்மன் மாரியம்மன். தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களில் மாரியம்மன் கோயில்கள் இருப்பதைப் பார்க்கிறோம். பின்னாளில் இது சக்தி வழிபாடாகக் கொண்டாடப் பட்டாலும் மாரியம்மன் வழிபாட்டின் தொடக்கம் கண்ணகி வழிபாடே!
கொங்கு நாட்டிலும் பெரும்பாலான ஊர்களில் மாரியம்மன் கோயில்கள் உள்ளன. கோவை மாநகரின் மையப்பகுதியில் தண்டு மாரியம்மன் கோயில் உள்ளதைக் கோவை மக்கள் அனைவரும் அறிவர்.
வறட்சியான கோடைக் காலங்களில் மழை வேண்டி மாரியம்மனுக்குத் திருவிழா நடத்தப் படுவது வழக்கமாக உள்ளது. இது ஆதியில் நடைபெற்ற கண்ணகி வழிபாட்டை எடுத்துக் காட்டுகிறது.
திருவிழாவின் போது கோயிலின் முன்புறத்தில் முக்கொம்புக் கம்பத்தில் பூவோட்டில் எரி வளர்ப்பதும், பக்தர்கள் பூவோட்டில் தீயேந்தி வருவதும் மதுரையைக் கண்ணகி எரியூட்டியதைப் போற்றுவதாக இருக்கலாம்.
தேனி மாவட்டத்திற்கு அருகில் தேசியத்திற்காகத் தமிழகம் கேரளத்திடம் இழந்த பகுதியிலுள்ள மங்கலதேவி கோயிலைச் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கட்டிய கோயிலென்று ஆண்டுதோறும் தமிழக மக்கள் சென்று வழிபட்டு வருகின்றனர்.
கொங்கு நாட்டிலும் கண்ணகி மங்கல தேவியாக வழிபடப் படுகிறாள்.
கோவை மாவட்டம் ஆலாந்துறைக்கு அருகிலுள்ள நாதகவுண்டன்புதூரிலிருந்து வடிவேலாம்பாளையம் செல்லும் சாலையில் மங்கலம்மன் கோயில் ஒன்றுள்ளது. இது இப்பகுதியைச் சேர்ந்த ஏழு ஊர் மக்கள் விழா எடுத்துக் கொண்டாடும் கோயிலாகும். இப்பகுதி கொங்கு நாட்டின் மேற்கெல்லைப் பகுதியாகும்.
இக்கோயிலில் சுடுமண்ணால் செய்யப்பட்ட யானை மற்றும் குதிரைச் சிற்பங்கள் மிகப்பெரிய அளவில் முன்னர் நிறைய இருந்தன. பாதுகாப்பற்ற நிலையில் தற்போது அவை அழிந்து விட்டன.
இக்கோயில் திருவிழாவிற்கு நாதகவுண்டன்புதூருக்குத் தென்மேற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியிலுள்ள மங்கலம்மன் சோலை என்னும் அடர்ந்த காட்டிலிருந்துதான் கரகம் கொண்டு வருவார்கள். அதைக் கொண்டுவரும் உரிமை அப்பகுதியிலுள்ள மலைவாழ் பழங்குடி மக்களுக்கே உரியது. ஆனால் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இக்கோயில் திருவிழா நடத்தப் படவில்லை.
மலையுச்சியிலுள்ள மங்கலம்மன் சோலையிலும் ஒரு மங்கலம்மன் கோயில் உள்ளது. திறந்த வெளியில் நடுகற்களைத் தெய்வமாக வழிபடுபவர்கள் இந்த மங்கலம்மன் சோலையையொட்டியுள்ள பாறைப்பட்டி என்னும் மலைக் குடியிருப்பைச் சேர்ந்த பழங்குடி மக்களும், நாதகவுண்டன்புதூர் மக்களுமாவர். தற்போது பாறைப்பட்டியைச் சேர்ந்த பெரும்பாலான பழங்குடி மக்கள் இடம் பெயர்ந்து விட்டனர்.
மங்கலம்மன் சோலையில் ஒவ்வோராண்டும் சித்திரைத் திங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதில் ஆடுகளை உயிர்ப்பலி தரும் வழக்கம் உள்ளது.
மங்கலம்மன் சோலைக் கோயிலுக்குக் கிழக்கில் உள்ளது பாறைப்பட்டி. அதற்கும் கிழக்கில் கோபாலசாமி கோயில் என்னும் மலை வழிபாட்டிடம் ஒன்று உள்ளது. இது வட்டமாகப் பரந்திருக்கும் ஒரு பாறைப் பரப்புத்தான். இது கோபாலசாமி கோயிலா, கோவலன்சாமி கோயிலா என்பது ஆய்வுக்குரியது. பண்டை நாட்களில் ஆடு, மாடு மேய்க்கும் மக்களால் கோபாலசாமியாகத் திருமால் வழிபடப் பட்டிருக்கலாம் என்பது ஒரு கருத்து.
ஆனால்,  அருகிலுள்ள மங்கலம்மனை மங்கலதேவி எனப் போற்றப்படும் கண்ணகிதேவி வழிபாடெனக் கொண்டால் இதனைக் கோவலன்சாமி கோயிலாகக் கருதலாம். சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம் குன்றக்குரவையில் மலைவாழ் பழங்குடி மக்கள் தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே எனக் கண்ணகியைத் தெய்வமாக வழிபடத் தொடங்கியதாகக் கூறப் பட்டுள்ளதை, இது கண்ணகி வழிபாடெனக் கொள்வதற்குச் சான்றாகக் கொள்ளலாம். எனவே மலைவாழ் மக்கள் இங்கும் கண்ணகியை வழிபடும் வாய்ப்புகள் உண்டு.
கண்ணகி கோவலனுடன் வானுலகம் சென்ற செய்தியைச் சேரன் செங்குட்டுவனுக்கு மலைவாழ் மக்கள்தான் கூறியதாகச் சிலப்பதிகார வஞ்சிக் காண்டம் காட்சிக்காதையில் செய்தி உள்ளது. சேரன் செங்குட்டுவன்  கண்ணகிக்காக இமயத்தில் கல்லெடுத்துவரப் படையுடன் சென்றபோது இந்தப்பகுதி வழியாகத்தான் சென்றிருக்க வேண்டும் என முனைவர் ந. இரா. சென்னியப்பன் அவர்கள் கூறுகிறார்.
எனவே கொங்கு நாட்டில் வழிபடப்படும் மங்கலம்மனும், மாரியம்மனும் கண்ணகிதேவியே எனக் கருதலாம்.