Sunday, April 26, 2015

தமிழில் சொல்லாக்கம் தேவையற்றதா?


    சொல்லாக்கம் என்பது ஒரு புதிய சொல்லை உண்டாக்குதல். இப்போது புதிது புதிதாகக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன. அவற்றிற்கான பெயர்கள் ஆங்கிலத்தில் இருக்கின்றன. அவற்றிற்கெனப் புதிய சொற்களைத் தமிழில் செய்வது சொல்லாக்கம். இதனைக் 'கலைச் சொல்லாக்கம்' என்று கூறுகின்றனர்.
    இந்தக் கலைச்சொல்லாக்கம் தேவை, தேவையில்லை என இருவகையான கருத்துக்கள் தமிழர்களில் பல்வேறு தரப்பினரிடமும் உள்ளன.
    புதிய சொல்லாக்கம் தேவையில்லை என்போர், இது தொடர்பாக வெவ்வேறு கருத்துக்களைச் சொல்கின்றனர். ஒரு தரப்பினர் ஆங்கிலம் அல்லது வேறு மொழியில் உள்ள சொற்கனை அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம் என்கின்றனர்.
    இன்னொரு தரப்பினர், மொழிபெயர்ப்பிற்குப் பதிலாக ஒலிபெயர்ப்புச் செய்து கொள்ளலாம் என்கின்றனர். சான்றாக, சிமெண்ட் என்பதைப் பாமர மக்கள் 'சிமிட்டி' என்கின்றனர். ஹாஸ்பிட்டல் என்பதை 'ஆஸ்பத்திரி' என்கின்றனர். இப்படிப் பேச்சு வழக்கில் உள்ளதை அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாமே என்கின்றனர்.
    வேறொரு தரப்பினர், புதிய சொல்லாக்கம் செய்தால், அது கடினமாக உள்ளது, என்னவென்றே புரியாததாக உள்ளது, நகைக்கத் தக்கதாக உள்ளது என்றெல்லாம் சொல்கின்றனர்.
    எடுத்துக்காட்டாக, காபி என்பதைக் 'கொட்டை வடிநீர்' என்றும், சைக்கிளைத் 'துவிச்சக்கர வண்டி' என்றும் மொழி பெயர்க்கின்றனர். இவை நன்றாகவா இருக்கின்றன? பேசுவதற்கும், ஒலிப்பதற்கும் கடினமாக உள்ளன, புரிவதுமில்லை. எனவே, காபியையும், சைக்கிளையும் அப்படியே சொல்லிக் கொள்ளலாமே என்கிறார்கள்.
    இதற்கான விடையைத் தருமுன், தமிழ்ச் சொல்லாக்கத்தின் தேவையை இங்கே சுருக்கமாகப் பார்த்து விடலாம்.
    பிற மொழிச் சொற்களைத் தமிழோடு கலப்பதால், தமிழின் தனித்தன்மை போய்விடும். தனித்தன்மை போனால் என்ன? மொழி என்பதே தகவல் தொடர்புக்குத்தானே, அது எப்படியிருந்தால் என்ன என்போர் உண்டு.
    முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பிற மொழிச் சொற்களுக்குப் புதிய சொற்களைப் படைத்துக் கொள்ளக்கூடிய தகுதியும், திறனும், ஆற்றலும் தமிழுக்கு உண்டு. ஆனால், பல வக்கற்ற மொழிகளுக்கு இல்லை. அவற்றைப் போலவே தமிழையும் கருதுவது தவறு.
    'ஜன்னல்' என்ற அயல்மொழிச் சொல்லை நாம் பயன்படுத்துகிறோம். தமிழில் 'காலதர்', 'பலகணி', 'சாளரம்' முதலிய சொற்கள் பண்டை நாளிலேயே உண்டு. இவை பயன்பாட்டில் இல்லாமல், ஜன்னல் என்பதே வழக்கத்தில் உள்ளது. இதனால், பண்டைத் தமிழர்களுக்குச் சாளரமே தெரியாதோ என்று மற்றையோர் எண்ண இடமளித்து விடும்.
    தமிழில் பிறமொழிச் சொற்களைக் கலப்பதால் ஏற்படும் இன்னொரு தீய விளைவு தமிழருக்குத் தமிழரே எதிரியாதல்! இது எப்படி என்று கேட்கலாம். இதற்கு நம் கண் முன்னே சான்றுகள் உள்ளன. வடக்கிருந்து வந்த நம்பூதிரிக்கூட்டம், சேர நாட்டில் தமிழோடு வலிந்து வடமொழியைப் புகுத்தியது. இக்கலப்பினால் அங்கே தமிழ் மாறி, மலையாளமாகியது. சேர நாடு என்பது மாறிக் கேரளமாகியது. பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் மற்றும் பல  சங்கத்தமிழ்ப் பாக்களைத் தந்த சேர நாடு, இன்று தமிழ் மண்ணாக இல்லை. தமிழனாக இருந்தவன் இன்று மலையாளியாக மாறித் தமிழனுக்கே எதிரியாகி விட்டான்.
    இதே போலத்தான் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட இன்ன பிற மொழிகளும் தமிழோடு பிற மொழிகள் கலந்ததால் உண்டாயின. இன்று எருமையூர் மைசூரானது. தமிழன் கன்னடனாகித் தமிழனுக்கு எதிரியானான். இவ்வாறுதான் தெலுங்கும் தெலுங்கரும்.
    அடுத்து, சொல்லாக்கம் செய்வதில் உள்ள இடர்ப்பாடுகள் பற்றிய செய்தி.
    முன்னர் சொன்ன கொட்டை வடிநீர், துவிச்சக்கர வண்டி முதலியவற்றைப் பார்ப்போம். சொல்லாக்கம் செய்வதில் பல்வேறு நிலைகள் உள்ளன. பலர் பல சொற்களை ஒரே பொருளுக்குப் புதிதாக உண்டாக்குகின்றனர். அவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் பொருத்தமானவையாக இருப்பினும் நம் தேவைக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சரியில்லாதவற்றைத் தவிர்த்து விடலாம். தமிழில் 'சொல்' என்னும் பொருள் தரும் நாற்பது சொற்கள் உள்ளன.
    செல்போன் என்பதைச் செல்பேசி, கைபேசி, அலைபேசி, செல்லிடப்பேசி எனப் பலவாறாகச் சொல்கின்றனர். இதை நாம் செல்லுமிடமெல்லாம் கொண்டு சென்று பேசுவதால், 'செல்லிடப்பேசி' என்பது பொருத்தமானதாக உள்ளது. அதைப் பயன்படுத்தலாம்.
    கம்ப்யூட்டர் என்பதை முதலில் கணிப்பொறி என்றனர். பின்னர் கணினி என்கின்றனர். இரண்டுமே பொருத்தமாக நன்றாக இருப்பதால், இரண்டையுமே பயன்படுத்தலாம். தவறில்லை.
    'கொட்டை வடிநீர்' என்பது பொருத்தமானதல்ல. காபிக் கொட்டையை அரைத்துத் தூளாக்கியே காபி கலந்து குடிக்கிறோம். கொட்டையை வடித்தல்ல. இதற்குத் தமிழ்ப் பேரறிஞர் தேவநேயப்பாவாணர் ஐயா அவர்கள் ஆய்வு நோக்கில் சொல்லாக்கம் செய்துள்ளார்.
    அதாவது, பிரேசில் நாட்டில் காபிக் கொட்டையை முதலில் பார்த்தவருக்கு அதில் குதிரையின் கால் குளம்பு போன்ற தோற்றம் தெரிந்திருக்கிறது. அவர்கள் மொழியில் காபி என்பது குதிரையின் கால் குளம்பைக் குறிக்கும் சொல். அதன் அடிப்படையில் இதனையும் காபி என்றார்களாம். அந்த வரலாற்றின் அடிப்படையில் காபியைக் 'குளம்பி' என்று பாவாணர் சொல்லாக்கம் செய்தார். இதைப் புரியாதவர்கள் குளம்புக்கும் குழம்புக்கும் வேறுபாடு தெரியாமல் குழம்பிப் போனவர்கள்தான்.
    இதே போல்தான் 'துவிச்சக்கர வண்டி' என்பதில் வண்டியைத் தவிர மற்றவை தமிழல்ல. இங்கே எது தமிழ், எது வடமொழி என்று அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு வடமொழிச் சொற்கள் தேவையின்றித் தமிழோடு கலக்கப்பட்டுள்ளன. எனவே, முதலில் நாம் செய்யும் சொல்லாக்கத்தில் அதன் அடிப்படை வேர் தமிழ்தானா என்பதை அறிந்து செய்ய வேண்டும். 'மிதி வண்டி' என்று செய்யப்பட்ட  சொல்லாக்கம் இனிதாகவும், எளிதாகவும் இருக்கிறது. இதில் கடினமோ, குழப்பமோ இல்லையே!
    கடினமாக இன்றி எளிமையான சொற்களை உண்டாக்கலாம். அதே வேளை, நம்முடைய மொழியில் உள்ள சொற்கள் நமக்கே கடினமா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். 'வெஹிக்கிள்' என்ற சொல்லின் கடினமான ஒலிப்பை விடவா 'வண்டி' என்பது கடினமாக உள்ளது?
    இன்னொன்று சொல்கிறார்கள், இந்தச் சொல்லாக்கத்தால் வரும் புதிய சொற்கள் என்னவென்று புரியவில்லை என்று. அது ஏன்? நாம் புரிந்து கொள்ளவோ, அறிந்து கொள்ளவோ விரும்புவதில்லை. ஆர்வம் கொள்வதில்லை.
    ஆங்கிலத்தில் Through, Thorough, Though, Tough ஆகிய சொற்களில் பெரும்பாலான எழுத்துக்கள் ஒன்றே ஆயினும், ஒலிப்பு ஒரே மாதிரியாயில்லை. வேறு வேறானவை. இவற்றை விடவா தமிழ் குழப்பமாகவும், கடினமாகவும் உள்ளது?-
    தமிழ்ச் சொல்லாக்கத்தை ஏளனமாகப் பேசும் இந்த ஆங்கிலக் காதலை, அயல் மொழி வேட்கையை, தமிழைத் தாழ்வாக நினைக்கும் மடமையை என்னென்பது?
    தமிழில் என்ன இருக்கிறது? என்று கேட்போர் சிலர் உள்ளனர். என்ன இல்லை? என்று இவர்கள் முதலில் அறிய வேண்டும். அடுத்து ஏன் இல்லை? என்று ஆய்ந்து பார்க்க வேண்டும். பின் இல்லாததைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். எதுவும் செய்யாமல், உண்மையில் தமிழில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிய அடிப்படை அறிவும் இல்லாமல் வீணே பேசித் தாய்மொழியை இழிவு செய்கின்றனர்.
    தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, தமிழ்நாட்டிலேயே திருமடம் அமைத்து சமயப்பணிகள் செய்து வரும் ஒரு துறவி, தமிழகத்தில் தமிழர்களோடு எப்போதும் ஆங்கிலத்திலேயே பேசுகிறார், எழுதுகிறார். இவருக்குத் தமிழ் தெரியாத மொழியல்ல. எதற்காக இப்படிச் செய்கிறார்? இப்படிப்பட்ட பிறவிகளை என்னவென்று சொல்வது?
    பொருத்தமான சொல்லாக்கத்தைப் படித்த அறிஞர்கள்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. பாமரனும் செய்யலாம். யார் செய்தாலும் சரியானதாக இருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
    'ஹார்ட்வேர்ஸ் அன்ட் பெயிண்ட் ஸ்டோர்' என்பதைத் தமிழில் எப்படி எழுதுவது? என்று தேவநேயப்பாவாணரிடம் ஒருவர் கேட்ட போது, 'வன்பொருள் வண்ணப்பூச்சு அங்காடி' என்று உடனே அவர் விடை தந்தாராம். இன்று கணினித்துறையில் வன்பொருள், மென்பொருள் எனும் சொற்கள் புழக்கத்தில் இருப்பதைக் காண்கிறோம்.   
    மேலும் அவர், சிமென்ட் என்பதற்குச் 'சுதைமா' என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார். பண்டைய நாளில் கோவில்களில் சுதைச் சிற்பங்கள் செய்யப்பட்டிருப்பதை இன்றும் காண்கிறோம். அதன் அடிப்படையில் 'சுதை மாவு' என்று மொழிபெயர்த்து அதைச் 'சுதைமா' என்றார் பாவாணர். இது நல்ல சொல்லாக்கம்தான். நாம்தான் பயன்படுத்தவுமில்லை, அறிந்து கொள்ளவுமில்லை.
    எனவே, பிறமொழிச் சொற்களைத் தமிழில் அப்படியே பயன்படுத்தாமல் சொல்லாக்கம் செய்து கொள்வது, தமிழுக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கும் நன்மையைத் தரும். பிரான்சு நாட்டில் எந்தவொரு புதிய அயல்மொழிச் சொல்லுக்கும் பிரெஞ்சு மொழியில் புதிய சொல்லாக்கம் செய்தே பயன்படுத்துகிறார்களாம். அவர்கள் ஆங்கிலத்தை இழிவான மொழியாகவே கருதுகிறார்களாம்.
    ஆனால், 'செம்மொழி' என்பதற்கு வரையறுக்கப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளையும் முழுமையாகக் கொண்டுள்ள ஒரே மொழியான தமிழுக்குச் சொந்தக்காரர்களாகிய நாம், நம் மொழியின் அருமை, பெருமையை அறியாமல் வளமில்லாத மொழிகளைப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.
    நாம், பாரதியார் சொன்னது போல் 'எட்டுத் திக்கும் சென்று கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பது' நல்ல தமிழில் இருக்க வேண்டும். அதைத்தான் பாரதியார் சொன்னார். அதே வேளை, ஏற்கெனவே உள்ள நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தாமல் விட்டிருக்கும் நிலையையும் மாற்றி நல்ல தமிழில் பேசவும் எழுதவும் முன்வர வேண்டும்.

சமஸ்கிருதம் தமிழர்களால் கொண்டாடப்பட வேண்டியதா?


    அண்மையில் இந்திய மைய அரசு நாடு முழுவதும் சமஸ்கிருத வாரம்  கொண்டாட வேண்டும் என்ற ஓர் அறிவிப்பை வெளியிட்டு அதற்குத் தமிழகத்தில் எதிர்ப்பும், ஆதரவும் வெளிப்பட்டன.
    தமிழக முதலமைச்சரே 'சமஸ்கிருத வாரம்' கொண்டாடுவதை ஏற்க இயலாதென இந்தியத் தலைமை அமைச்சருக்குக் கடிதம் எழுதினார். ஆனால், தமிழகத்திலே தமிழர்களாகப் பிறந்தும் இன உணர்வு இல்லாதவர்களும், தமிழகத்தில் பஞ்சம் பிழைக்க வந்த வந்தேறிகளும் சமஸ்கிருதத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
    இதிலே கர்நாடக மாநில எழுத்தாளர் திரு. எஸ்.எல். பைரப்பா என்பவர் தி.மு.க.&தான் சமஸ்கிருத அழிவுக்குக் காரணம் என்று குற்றம் சாட்டினார். அவர் சொல்வது போல சமஸ்கிருதம் அழிந்து போயிருந்தாலும், அதற்குத் தி.மு.க. காரணமாக இருந்திருந்தாலும் தி.மு.க. பாராட்டிற்குரியதுதான்.
    சென்ற 7.8.2014 அன்று வெளியான 'தி இந்து' தமிழ் நாளிதழில் திரு. ஆர். நடராஜன் என்ற ஓர் இதழாளர் தன் சமஸ்கிருத அடிமைத்தனத்தை ஒரு சிறு கட்டுரையாக எழுதியிருந்தார்.
    அதிலே, தமிழகத்தில் படித்த மாணவர்கள் பிழையில்லாமல் தமிழ் எழுதுவதில்லை, தொலைக்காட்சித் தமிழின் உச்சரிப்பு நாரசமாக இருக்கிறது என்றெல்லாம் சொல்லியிருந்தார். இது உண்மைதான். அதற்காக அதைத் திருத்தும் பணியில் ஈடுபட வேண்டுமா, அதை விட்டு விட்டு சமஸ்கிருதத்திற்குக் காவடி எடுக்க வேண்டுமா?
    இவர் கூறியபடி தமிழைத் தமிழர்கள் பிழையாக எழுதுவதற்கும், தொலைக்காட்சிகளில் தமிழ் கெட்டுப் போனதற்கும் கரணியம் தமிழர்கள் தமிழை நன்கு கற்க வேண்டும் என்ற உணர்வில்லாமல் போனதும், தமிழாசிரியர்களே பலர் தமிழில் தற்குறிகளாக இருந்து கடமையுணர்வில்லாமல் ஊதியத்திற்காக மட்டும் கற்பிப்பதும்தான்.
    இன உணர்வில்லாமல் போனதற்குக் காரணம் இந்திய மைய அரசின் அடக்குமுறையும், இந்தித்திணிப்பும், தமிழுணர்வைப் பிரிவினைவாதம் என்று தடுப்பதும்தான் என்பதை ஆழ்ந்து எண்ணிப் பார்ப்போர் உணரலாம்.
    'தமிழ் வாழ்க' என்று தமிழக அரசுக் கட்டடங்களில் இருப்பதைக் குநை கூறுகிறார் திரு நடராஜன். அயல் நாடுகளில் இப்படி இல்லை என்கிறார். இதற்குக் காரணம் இவர்களைப் போன்றவர்களால் தமிழ் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதுதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
    அவர் கேட்கும் கேள்விகள் "சமஸ்கிருதம் சிங்கமா, புலியா-? இவர்கள் மீது விழுந்து பிறாண்டிக் கடித்துக் குதறிவிடப் போகிறதா? ஏன் இந்தக் கவலை? சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படும் நாட்களில் தமிழ் மொழி நாடு கடத்தப் படுமா? சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுவதால் தமிழ் அழிந்து விடுமா? அந்த நாட்களில் மக்கள் சமஸ்கிருதம்தான் பேச வேண்டும், தமிழ் பேசக்கூடாது என்று கட்டாயமா? அரசியல்வாதிகள் அதற்காக ஏன் இப்படித் துள்ளிக் குதிக்க வேண்டும்?"
    இக்கேள்விகளுக்கு நாம் இங்கே விடை தருகிறோம். அதற்கு அவர் கேரள மாநில வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும்.
    பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் மற்றும் பல சங்க இலக்கியப் பாடல்களைத் தந்த நாடு பண்டைய தமிழ்ச் சேரநாடு. அந்த அளவு இனிய தமிழ் வழங்கிய தமிழ்ச் சேரநாடு இன்று மலையாளக் கேரளமாக மாறியது ஏன்? எப்படி?
    வந்தேறிகளான நம்பூதிரிக்கூட்டம் சேர நாட்டில் குடியேறிய பின் தமிழோடு சமஸ்கிருதத்தை வலிந்து புகுத்திக் கலந்து அங்கே தமிழ் ஒழிந்து மலையாளம் என ஒரு புது மொழி கி.பி. 12 & 13 ஆம் நூற்றாண்டளவில் தோன்றியது.
    மலையாளம் பேசத் தொடங்கிய தமிழர்கள் மலையாளிகள் என்றொரு தனி இனமாக மாறியது மட்டுமல்ல, தமிழகத்துத் தமிழர்களை எதிரிகளாகக் கருதத் தொடங்கி விட்டனர்.
    மாநில எல்லைகள் பிரிக்கப்பட்ட போது இன உணர்வில்லாத காமராசர் தமிழக முதல்வராக இருந்ததால்தான் தேவிகுளம், பீர்மேடு, இடுக்கி, நெய்யாற்றங்கரை, உடும்பன்சோலை, செங்கோட்டையின் மறுபாதி, வேலந்தாவளம், சித்தூர், கொழிஞ்சாம்பாறை, சிறுவாணி, அட்டப்பாடி என ஏராளமான தமிழர் பகுதிகளை மலையாளிகள் அபகரித்துக் கொண்டனர்.
    இதனால் அங்குள்ள தமிழர்கள் மலையாளிகளாக வலிந்து மாற்றப்படுகின்றனர். ஏறத்தாழ 20 ஆறுகளைத் தமிழகம் இழந்து வறட்சியில் தவிக்கிறது. தமிழனுக்குச் சொந்தமான முல்லைப்பெரியாறு, சிறுவாணி, பவானி ஆறுகளைக் கேரளம் சொந்தம் கொண்டாடுகிறது.
    கேரளம் அங்குள்ளோர் அனைவரும் பிழைக்க வக்கற்ற மாநிலமாக இருப்பதால் ஏராளமான மலையாளிகள் தமிழகத்திலும், இந்தியா முழுவதிலும், அயல் நாடுகளிலும் பிழைப்புத் தேடிக் குடி பெயர்ந்துள்ளனர். தமிழகத்தில் அவர்கள் பிழைப்புக்காக வந்து வாழ்ந்தாலும் அவர்கள் அபகரித்த தமிழகத்துக்குச் சொந்தமான ஆறுகளிலிருந்து தண்ணீர் தர மறுக்கின்றனர்.
    இப்படித் தமிழனுக்குத் தமிழனே எதிரியாகித் தண்ணீருக்குக் கையேந்தும் நிலைக்குக் காரணம் இந்த ஈன மொழியான சமஸ்கிருதத் திணிப்புத்தான் என்பதும், தமிழனுக்கு இன, மொழியுணர்வு இல்லாமல் போனதும்தான் என்பதை இன, மொழியுணர்வு கூடாது என்று கூறும் கூட்டத்தைச் சேர்ந்த திரு. நடராஜன் உள்ளிட்டோர் உணர்ந்து கொள்ள வேண்டும். இதை வைத்துச் சமஸ்கிருதத்தால் தமிழ் அழியவில்லையா என்று திரு. நடராஜன் சொல்லட்டும்.
    திரு. நடராஜன் காதலர் தினம் கொண்டாடுவதைக் குறை கூறுகிறார். இதை நாமும் ஏற்பதில்லை. அதே வேளை இது தமிழகத்தில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. சமஸ்கிருதத்தைக் கொண்டாடும் வடநாட்டிலும்தான் கொண்டாடுகிறார்கள். அங்கே செய்வது தவறில்லையா?
    இந்த நாட்டின் மாபெரும் தத்துவ நூல்கள் சமஸ்கிருதத்தில்தான் எழுதப்பட்டன என்கிறார் திரு. நடராஜன். சமஸ்கிருதம் 'தேவபாஷை' (கடவுளர் மொழி) என்று ஒரு செய்தி பல காலமாகப் பரப்பப்பட்டு வருகிறது. இதை நம்பிய தமிழக மன்னர்களும், கற்றறிந்த அறிஞர்களும் அதற்கு ஆதரவாக இருந்தது ஒரு காலம்.
    அப்போது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல்களில் பல தமிழர்களாலும் எழுதப்பட்டன என்பதையும், தமிழிலிருந்து பல நூல்கள் சமஸ்கிருதத்திற்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள் பல திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன. பழைய ஓலைச்சுவடிகளை ஆற்றில் விட வேண்டும், போகிப் பண்டிகையில் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்ற பழக்கங்களைப் புகுத்தி ஏராளமான நூல்கள் அழிக்கப்பட்டுள்ளன.
    தில்லையில் தீட்சிதர்கள் தேவார ஓலைச்சுவடிகளை இராசராசசோழ மாமன்னனே கேட்டும் கொடுக்க மறுத்த கதையைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால் பெரும்பாலான தேவாரப்பாடல்கள் கரையான்களுக்கு உணவாகி அழிந்துள்ளன.
    தமிழகத்தைச் சேர்ந்த பல கலைகளைப் பற்றிய நூல்கள் தமிழில் இல்லாமல் வடமொழியில் இருப்பது எப்படி? இந்தத் திட்டமிட்ட சூழ்ச்சி முறையில்தான்.
    சமஸ்கிருதத்தில் புராணங்கள், மறைகள், உபநிடதங்கள், தத்துவ நூல்கள் இருக்கின்றன என்பதற்காக அம்மொழியைத் தெய்வ மொழியென்று கூறி மக்களை ஏமாற்றிப் பிற மொழிகளை அழிக்கும் முயற்சி நெடுங்காலமாகவே நடந்து வந்துள்ளது. இதில் ஆரியச் சூழ்ச்சியாளர்களுக்கு வெற்றியும் கிடைத்துள்ளது என்பது உண்மை. ஆனால், இன்னும் இந்தச் சூழ்ச்சிக்குப் பலியாகும் மக்களில் படித்த மேல்தட்டு மக்களே இருப்பதை என்னவென்று சொல்வது?
    சமஸ்கிருதத்தில் புராணங்களும் பிறவும் இருக்கின்றன என்றால், அவற்றை மொழிபெயர்த்துப் படிப்பது இயலாத செயலல்ல. ஏற்கெனவே மறைகளும், உபநிடதங்களும், புராணங்களும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
    கிரேக்க மொழியில் பல இலக்கியங்கள், புராணங்கள் இருக்கின்றன. அவற்றைப் படிக்க விரும்பும் ஆங்கிலேயர்கள் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்கிறார்களே தவிர, கிரேக்க மொழியைக் கடவுளின் மொழி என்று நம்பி அதைக் கற்று அதன் வழியாகக் கிரேக்க இலக்கியங்களைப் படிப்பதில்லை.
    சமஸ்கிருதத்தைத் 'தேவபாஷை' என்று உயர்த்திய கூட்டம்தான் தமிழை "நீச பாஷை" என்று தாழ்த்திப் பேசியது. இந்த இழிவையும் தாங்கிக் கொண்டு தமிழன் 'சமஸ்கிருத வாரம்' கொண்டாட வேண்டுமா? மானமற்ற நடராஜன்களாகவே தமிழினத்தார் எல்லோரும் ஆகிவிட வேண்டுமா? நீச மொழி பேசும் நாட்டில் தேவ மொழியை ஏன் புகுத்த வேண்டும்? அதற்குத் தீட்டு நேர்ந்து விடாதா?
    திரு. நடராஜனின் கட்டுரைக்கு மறுப்புத் தெரிவித்து திரு. சுப. வீரபாண்டியன் அவர்கள் 'தி இந்து' 8.8.2014 நாளிதழில் வெளியிட்ட கட்டுரையில் உள்ள செய்திகளின்படி, வெறும் 15 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் பேசும் மொழிதான் சமஸ்கிருதம். அதற்கு மைய அரசு செலவிட்ட தொகை 2008 & 2009 & இல் ரூ. 72.10 கோடி. 2009& 10 &இல் ரூ. 99.18 கோடி. 2010& 11 &இல் ரூ 108.75 கோடி.
    ஆனால், உலகளாவிய அளவில் 10 கோடி மக்களால் பேசப்படுகிற செம்மொழிக்கான தகுதிகள் முழுவதையும் பெற்றுள்ள ஒரே மொழியான தமிழுக்கு இதே மைய அரசு செலவிட்டது 2008&09 &இல் ரூ. 4. 47 கோடி. 2009& 10 &இல் ரூ. 8.61 கோடி. 2010& 11 &இல் ரூ 10.16 கோடிதான்.
    எந்த ஒரு மாநிலத்திலும் ஆட்சி மொழியாக இல்லாத இந்த மொழியின் மேம்பாட்டிற்கு மக்களின் வரிப்பணம் இத்தனை கோடியை எதற்காகச் செலவு செய்ய வேண்டும். இதனால் அந்நிய முதலீடு ஏதேனும் அதிகரிக்கிறதா? அந்நியச் செலாவணி கூடுதலாகக் கிடைக்கிறதா?
    சமஸ்கிருதம் தேவபாஷை என்றால் அதன் மேம்பாட்டிற்குத் தெய்வங்களே தேவலோகத்திலிருந்து பொன்னையும், பொருளையும் கொண்டு வந்து செலவு செய்து கொள்ளட்டும். மாந்தர்கள் எதுவும் செய்ய வேண்டாம். சமஸ்கிருத வாரத்தையும் கொண்டாடிக் கொள்ளட்டும். நீசமொழி பேசும் தமிழகத்தில் தேவமொழிக்கு என்ன வேலை?
    தமிழகத்தில் தமிழை ஒரு பாடமொழியாகக்கூடக் கற்பிக்கக் கூடாதென்று கல்வியை வணிகமாக்கி வரும் வணிகர்கள் கூட்டம் நீதிமன்றத்தில் வழக்கிடும் நிலையும், அதனை வல்லமையுள்ள மாநில அரசு எதிர்கொள்ளும் நிலையும் எவ்வளவு கேவலமானது! இதற்குக் காரணம் இன, மொழியுணர்வு இல்லாமல் போனதுதான். இதைத் தமிழர்கள் சற்றேனும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
    தமிழர்கள் இன உணர்வோடு வாழ்ந்திட வேண்டும். சமஸ்கிருதத்தைத் தமிழகத்தில் வேரறுக்கும் பணியைத் தொடர்ந்திட வேண்டும்.