Wednesday, February 17, 2010

தேசியம் என்பது தமிழனுக்கு மட்டுமா?

அண்டை மாநிலங்களாலும், மைய அரசாலும் ஆண்டாண்டுக் காலமாகத் தொடர்ந்து வஞ்சிக்கப் படும் ஒரே மாநிலமாகத் தமிழகம் தவித்து வருகிறது.
முதலில் ஆறுகள் தொடர்பான தகராறு. கர்நாடக மாநிலத்தோடு காவிரி நீர்ப் பங்கீட்டுச் சிக்கல். ஆந்திர மாநிலத்தோடு பாலாற்றுச் சிக்கல். கேரள மாநிலத்தோடு உள்ள சிக்கல்களான முல்லைப் பெரியாறு, சிறுவாணி, பவானி ஆகியவற்றோடு தற்போது அமராவதி அணையின் பாம்பாறு புதிதாகச் சேர்ந்துள்ளது.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்னவென்று பார்த்தால் தமிழகம் தன்னுடைய எல்லைகளை அண்டை மாநிலங்களிடம் இழந்து நிற்பதுதான்.
மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது சித்தூர்,புத்தூர்,திருப்பதி,காளத்தி,பலமனேரி, காகுந்தி, வாயல்பாடி முதலிய பகுதிகளைத் தெலுங்கர்கள் கொள்ளையடித்துக் கொண்டார்கள்.
மைசூர், பெங்கஹர், கோலார், கொள்ளேகாலம், மாண்டியா மாவட்டத்தின் தமிழ்ப் பகுதிகள் ஆகியவற்றைக் கன்னடர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இவற்றில் பெங்கஹர் கன்னடர்களின் தலைநகரமாக இருக்கிறது. காவிரி தோன்றும் குடகுப்பகுதி தமிழகத்தோடு இணைய விரும்பியும் தமிழகத்தில் அப்போதிருந்த தேசிய விரும்பி மேதாவிகள் அதை ஏற்கவில்லை. இதுதான் இன்றைய காவிரிச் சிக்கலுக்கு அடிப்படை.
தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, சித்தூர், கொழிஞ்சாம்பாறை, உடும்பன் சோலை, செங்கோட்டையின் மறுபாதி, வேலந்தாவளம் உள்ளிட்ட பாலக்காடு மாவட்டத்தின் பெரும் பகுதி, அட்டப்பாடி முதலிய தமிழ்ப் பகுதிகளை மலையாளத்தார் பறித்துக் கொண்டனர்.
இதனால் தமிழன் தன் நிலப்பரப்பை இழந்ததோடு அங்குள்ள தமிழர்கள் தமிழுக்கும், தமிழர்க்கும் அந்நியமாகிப் போனார்கள். தமிழ்நாட்டுக்குச் சொந்தமான ஆறுகள் இன்றைக்கு அண்டை மாநிலங்களின் பிடியில்.
கேரளம் பண்டைய தமிழ்ச் சேரநாடுதான் என்றாலும் நம்பூதிரிக் கூட்டத்தார் வலிந்து வடமொழியைத் தமிழோடு கலந்து மலையாளம் என்ற ஒரு புதிய மொழியை உண்டாக்கி தமிழனைத் தமிழனுக்கு எதிரியாக்கினார்கள்.
இன்றைக்குப் பெருமைக்காகக் கேரளத்தைக் கடவுளின் பூமி என்று மலையாளிகள் கூறினாலும் உண்மையில் அப்படியில்லை. எப்போது பார்த்தாலும் மத, இனக் கலவரங்களும், கடையடைப்புகளும், பேருந்துகளும் பிற ஊர்திகளும் ஓடாத நிலையும் அடிக்கடி ஏற்படும் மாநிலம்தான் கேரளம். பந்த் என்னும் வேலை நிறுத்தம் சட்டவிரோதம் என்ற தீர்ப்பே கேரள உயர்நீதி மன்றத்தில்தான் வழங்கப்பட்டது. மின்சாரம், போக்குவரத்து, உணவு உற்பத்தி என எல்லாவற்றிலும் பின்தங்கியுள்ள மாநிலமாகவே கேரளம் உள்ளது. எனவே மலையாளிகள் தங்கள் மாநிலத்தை விட்டு வேறு மாநிலங்களுக்கும், வேறு நாடுகளுக்கும் பிழைப்புக்காகச் செல்ல வேண்டிய நிலை தவிர்க்க முடியாததாக உள்ளது.
தமிழ்நாட்டில் மலையாளிகள் குடியேறாத ஊர்களே இல்லை எனலாம். அதிலும் கோவை, கன்னியாகுமரியில் ஏராளமானோர் வந்து குடியேறியுள்ளனர்.
கோவையில் ஒரு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்களாக உள்ளார்கள். கோவையில் மலையாளி சமாஜம் ஏற்படுத்தி அதன் சார்பில் பள்ளிகள், கல்லூரிகள் நடத்துகிறார்கள். அவற்றிலும், அவர்கள் நடத்தும் வேறு தொழில் நிறுவனங்களிலும் மலையாளிகளையே உயர் பதவிகளில் அமர்த்துகிறார்கள். தமிழர்களுக்கு ஏதோ எடுபிடி வேலைகளும், கடைநிலைப் பணிகளுமே தருகிறார்கள்.
தமிழன் தரும் காசைப் பெற்றுக் கொண்டு தொழில் நடத்தினாலும் தமிழனுக்கெதிராகவே தமிழகத்திலும் அவர்களது நடவடிக்கைகள் உள்ளன. சேலம் இரயில்வே கோட்டம் இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வந்துள்ளதா என ஐயப்படும் நிலையே உள்ளது, இங்கே அவர்கள் சொகுசாக வாழ்ந்தாலும் வாழ்வு தரும் தமிழர்க்கெதிராகவே செயல்படுகிறார்கள்.
மலையாளிகளின் ஓணம் பண்டிகைக்குத் தமிழக அரசு விடுமுறை தருகிறது. அவர்கள் வந்தேறிகள். ஆனால் வலுக்கட்டாயமாகக் கேரளத்துடன் சேர்க்கப்பட்ட தமிழர் பகுதிகளில் பொங்கல் விடுமுறைக்காக உண்ணா நோன்புப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் அந்த மாநிலத்தைச் சாராதவர்கள் ஓர் அங்குல இடம் வாங்க முடியாது. ஆனால் தமிழ்நாடு மட்டும் வந்தோர்க்கெல்லாம் புறம்போக்காகப் போய் விட்டது. இங்கே தெலுங்கர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். கன்னடர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகிறார்கள். வந்தேறித் தெலுங்கர்கள் கிருஷ்ணகிரியை ஆந்திராவோடு இணைக்க வேண்டுமென்கிறார்கள். கர்நாடகத்தில் தமிழன் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணி செய்யப் போனாலும் கன்னடர்கள் அதை எதிர்க்கிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம் தமிழர்கள் இன உணர்வில்லாதவர்களாக இருப்பதுதான்.
தமிழர்கள் தங்கள் மாநிலத்தில் நீர்வளம் அற்றுப் பாலைநிலமாகும் சூழலை எதிர்கொள்ளும் நிலை வந்து கொண்டிருக்கிறது. இந்தநிலை ஏற்படாதிருக்க வேண்டுமானால் ம.பொ.சி. விட்டுச்சென்ற எல்லை மீட்புப் போராட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும். காஷ்மீருக்கு மட்டும் உள்ள சிறப்பு உரிமைகளைத் தமிழகத்திற்கும் பெற வேண்டும். ஆட்சியாளர்களும், உணர்வுள்ள தமிழர்களும் இதுபற்றி எண்ணிப் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment