Showing posts with label கக்கன். Show all posts
Showing posts with label கக்கன். Show all posts
Sunday, July 29, 2012
நேர்மையின் இலக்கணம் கக்கன்
பொதுவாழ்வில் தூய்மையானவர்களைக் காண்பது அரிதாக உள்ள இன்றைய நிலையில், தூய்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அப்பழுக்கற்ற தலைவர்கள் பலர் நம் முந்தைய தலைமுறையில் இருந்திருக்கிறார்கள் என்பதை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.
காந்தியடிகள் வழிநடந்த தொண்டர்களாக இருந்த பலர், நாடு விடுதலை பெற்றபின் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து மக்கள் பணி செய்த போதும் தங்கள் செயல்களில் நேர்மை தவறாமல் நடந்தனர். அத்தகைய தூயவர்களில் ஒருவராக, நாடு போற்றும் நல்லவராக விளங்கிய ஒருவர்தான் எளிமையின் இலக்கணம், தூய்மையின் இருப்பிடம் என்று போற்றப்பட்ட திரு. கக்கன் அவர்களாவார்.
எதிர்க்கட்சியினராலும் போற்றப்பட்டவரான திரு. கக்கன் 1957 இல் பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில் வேளாண்மை, கால்நடை, தாழ்த்தப் பட்டோர் நலம், பொதுப்பணி ஆகிய துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார்.
1962 இல் மீண்டும் அமைந்த காமராஜர் அமைச்சரவையில் வேளாண்மை, உணவு, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை, தாழ்த்தப்பட்டோர் நலன் ஆகிய துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார்.
காமராஜர் பதவி விலகியபின் திரு. பக்தவத்சலம் தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை, காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை, தொழிலாளர் நலத்துறை, அறநிலையத்துறை, தாழ்த்தப்பட்டோர் நலத்துறை எனப் பெரும் பொறுப்புகள் கொண்ட பல துறைகளின் அமைச்சராகத் திறம்படப் பணியாற்றினார்.
பத்தாண்டுக் காலம் மாநில அமைச்சராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கியவராயினும் கறைபடியாத கைகளுக்குச் சொந்தக் காரராகவே செயல்பட்டதால், இறுதிவரை எளிய வாழ்க்கையே வாழ்ந்த சிறப்புக்குரியவர் கக்கன் அவர்கள்.
இவரது வாழ்க்கை பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளோருக்கும், ஈடுபட விரும்புவோருக்கும் ஒரு வழிகாட்டி என்றால் அது மிகையாகாது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் 18.6.1909 இல் பிறந்தவர் திரு. கக்கன். இவரது தந்தையார் பூசாரிக்கக்கன். தாயார் குப்பி அம்மையார்.
கக்கன் என்பது அவர்களது குலதெய்வப் பெயராக இருக்கலாம் என்பர். ஆண்களுக்குக் கக்கன் என்றும், பெண்களுக்குக் கக்கி என்றும் பெயர் சூட்டும் வழக்கம் உண்டென்பர். அப்பகுதியில் வீரகாளியம்மன் கோவில் பூசாரிக்குடும்பத்தைச் சேர்ந்தவர் பூசாரிக்கக்கன். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வருவாய்த்துறை அதிகாரிக்கு ஊர்ப்புற உதவியாளராகப் பணியாற்றியவர்.
இளமையிலேயே தன் தாயை இழந்தார் கக்கன். தனக்குச் சிற்றன்னையாக வந்த பிரம்பியம்மாள் என்னும் அம்மையாரால் வளர்க்கப் பட்டார்.
கக்கனின் தந்தையார் பூசாரிக்கக்கன் தன் பணிகள் தொடர்பாகப் பல்வேறு அதிகாரிகளைப் பார்த்ததால், தன் மகனையும் படிக்க வைத்து ஓர் உயர் அதிகாரியாக்க ஆசைப்பட்டார்.
தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடிய காலம் அது. தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த துயரமான சூழ்நிலையில் ஏழ்மை, தீண்டாமைக் கொடுமை ஆகிய இடர்ப்பாடுகளுக்கிடையே எதிர்நீச்சல் போட்டுத் தொடக்கக் கல்வியைப் பயின்றார்.
உயர்நிலைப் பள்ளிப் படிப்பை மதுரை திருமங்கலத்திலும், மேலூரிலும், பசுமலையிலும் படித்தார். விடுதலைப் போராட்ட வீரரான வைத்தியநாத ஐயர் மற்றும் அவரது நண்பர்கள் உதவி செய்தனர். அதன்படி அரிசன சேவா சங்க உதவித்தொகை பெற்று உயர் கல்வியைத் தொடர்ந்தார். எனினும் பள்ளி இறுதித் தேர்வில் (எஸ்.எஸ்.எல்.சி) ஆங்கிலப் பாடத்தில் வெறும் ஒரு மதிப்பெண் குறைவாகப் பெற்றதால் தோல்வியடைந்தார். மீண்டும் படித்தும் அவரால் வெற்றிபெற முடியவில்லை.
கல்வி பயின்ற காலத்திலேயே நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்களின் தொடர்பு ஏற்பட்டிருந்ததால் அவருக்குக் கல்வியில் தொடர்ந்து ஈடுபாடு ஏற்படவில்லை. வைத்தியநாத ஐயர், என். எம். ஆர். சுப்பராமன் முதலியோர் நடத்திவந்த அரிசன சேவா சங்கத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஏற்புடையவராகக் கக்கன் விளங்கியதால் அவரைச் சங்கத்தின் தொண்டராகச் சேர்த்துக் கொண்டனர். அதிலிருந்து கக்கனின் தூய பொது வாழ்வு தொடங்கியது.
முதலில் மதுரை மேலூரில் உள்ள மாணவர் விடுதிக் காப்பாளராகப் பணியைத் தொடங்கினார். பின் சேவா சங்கத்தின் கல்விப் பணிகளில் ஈடுபட்டார். ஒவ்வொரு சிற்றூருக்கும் சென்று தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளில் இரவுப் பள்ளிகளைத் தொடங்கினார். அப்பள்ளிகளை மேற்பார்வை செய்வதும், பள்ளிகளுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுப்பதும் இவரது பணிகள். இதற்காக வைத்தியநாத ஐயரும், அவரது நண்பர்களும் தரும் பணத்திற்கு முறையான கணக்குகளைப் பராமரித்து அவர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.
1934 இல் மதுரைக்கு வந்த காந்தியடிகள் கக்கனின் பொதுத் தொண்டுகளை அறிந்தார். அந்தச் சந்திப்பின்போது, காந்தியடிகளுடன் சுற்றுப்பயணம் செய்த கக்கன் காந்தியக் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
இதன் காரணமாக, 1939 ஆம் ஆண்டு வைத்தியநாத ஐயர் மூலம் காங்கிரசில் இணைந்து பொதுத்தொண்டுகளுடன் விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார்.
அவர் போகுமிடமெல்லாம் வந்தே மாதரம் முழக்கமிட்டதற்காக 1940 இல் ஆங்கில அரசால் 15 நாள்கள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப் பட்டார். அந்த 1940 இல்தான் அவர் மேலூர் வட்டக் காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
காந்தியடிகள் அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னிந்தியாவைச் சேர்ந்த தலைவர் கக்கன்தான் என்பது பெருமைக்குரிய ஒன்று. இந்தப் போராட்டத்திற்காகவும் ஒரு மாதச் சிறைத்தண்டனை பெற்றார்.
1942 இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட கக்கன், வெள்ளையக் காவல் துறையினரால் கொடூரமாகத் தாக்கப் பட்டார். செய்யாத குற்றங்களையெல்லாம் அவர்மீது சுமத்தி விசாரணை ஏதுமின்றிக் கடுங்காவல் தண்டனை வழங்கியது ஆங்கில அரசு. ஒன்றரை ஆண்டுக் கடுங்காவல் தண்டனையை ஆந்திர மாநிலத்திலுள்ள அலிப்பூர் சிறையில் அனுபவித்தார்.
அவரது அரசியல் வாழ்வில் பல பதவிகள் அவரைத் தேடி வந்தன. முதலில் 1941- 42 இல் நடைபெற்ற மாவட்டக் கழக உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1946 இல் அரசியலமைப்புச் சட்டசபை உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.
நாட்டு விடுதலைக்குப்பின் 1952 இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1957 மற்றும் 1962 ஆகிய தேர்தல்களில் தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமைச்சர் பொறுப்பேற்றுப் பல் நற்பணிகளைச் செய்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் பணியாற்றினார். இவர் தலைவராக இருந்த போதுதான் 1955 இல் காங்கிரஸ் கட்சியின் அனைத்திந்திய மாநாட்டைச் சென்னையில் சிறப்புற நடத்தினார்.
1963 இல் காமராஜர் கட்சிப்பணிக்காக முதல்வர் பதவியிலிருந்து விலகியபோது, அடுத்த முதல்வராகக் கக்கனையே கொண்டுவர விரும்பினார் என்று கூறப்படுகிறது. ஆனால், திரு. பக்தவத்சலம் அவர்கள் முதல்வரானார். அவரது அமைச்சரவையில் நிதி, உள்துறை, கல்வி, சிறை, அறநிலையத்துறை, தொழிலாளர் நலம், தாழ்த்தப்பட்டோர் நலம் முதலிய பல பெரும் பொறுப்புகள் கொண்ட அமைச்சராகத் திறம்படப் பணியாற்றினார் கக்கன்.
1967 இல் தி.மு.க. ஆட்சியமைத்த போது கக்கன் அவர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அத்துடன் அவரது அரசுப் பணிகள் முடிவுக்கு வந்தன. ஆனால், கட்சிப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டார்.
பத்தாண்டுக்காலம் அமைச்சர் பதவியில் இருந்தபோதும், அவருக்கென்று சொந்த வீடோ, வேறு சொத்துக்களோ வைத்திருக்கவில்லை. விடுதலைப் போரில் ஈடுபட்டமைக்காகத் தமக்குக் கிடைத்த சிறு நிலத்தையும் வினோபாவின் பூதான இயக்கத்திற்குக் கொடுத்து விட்டார்.
அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின் சொந்தமாக ஊர்தி ஏதுமில்லாததால், ஒரு முன்னாள் அமைச்சர் பேருந்துக்காகக் கால் கடுக்கக் காத்திருந்ததையும், வாடகை வீடு தேடி அலைந்ததையும், இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த போது மதுரை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகூட இல்லாமல் தரையில் படுத்துக் கிடந்ததையும், அதையறிந்த அன்றைய முதல்வர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தததையும் தமிழக மக்களில் பெரும்பாலோர் அறிவர். அதனால்தான் கக்கன் என்றாலே அவர் தூய்மையின் அடையாளமாக மதிக்கப் படுகிறார்.
அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்த போதும் அவரது துணைவியார் ஆசிரியைப் பணி செய்தே குடும்பத்தைக் கவனித்தார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் அவரது தந்தையார், தான் செய்து வந்த வருவாய்த்துறை ஊர்ப்புற உதவியாளர் பணியைச் செய்தே வாழ்க்கை நடத்தினார்.
இவர் அமைச்சராக இருந்தபோது பல்வேறு பொதுநலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். அவற்றில் குறிப்பிடத் தக்கவை மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தது, வைகை, பாலாறு உள்ளிட்ட பல அணைக்கட்டுத் திட்டங்களை நிறைவேற்றியது, விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான பணிகளைக் கூறலாம்.
அவர் நாடாளமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பணியாற்றிய போது அவை நடவடிக்கைகளில் தவறாது பங்கேற்பது இவருடைய சிறந்த பழக்கமாக இருந்தது. நேரம் தாழ்த்தாமல் அலுவலகத்திற்கு வருவதும், மக்கள் குறைகளைக் கேட்டு ஆவன செய்வதும் இவருடைய பண்பு நலன்களில் குறிப்பிடத்தக்கவை.
தீண்டாமை ஒழிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த கக்கன் அதற்காகப் பல்வேறு செயல்பளைச் செய்துள்ளார். அவரது ஊரான தும்பைப் பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்கள் நீரெடுக்க ஒரு குளமும், பிற வகுப்பார் நீரெடுக்க ஒரு குளமும் இருந்தன. தாழ்த்தப்பட்ட வகுப்பார் நீரெடுக்கும் குளம் மக்கள் அசுத்தங்களைக் கழுவவும், ஆடு மாடுகளைக் குளிப்பாட்டவும் பயன்படுத்தப்பட்ட குளமாகும்.
இந்த இழிநிலையை எதிர்த்து ஒத்த கருத்துடைய பிற வகுப்பாருடன் இணைந்து போராடி அனைவரும் ஒரே குளத்தில் குடி நீரெடுக்கும் உரிமையைப் பெற்றுத்தந்தார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் கோவில் நுழைவுப் போராட்டத்தை வைத்தியநாத ஐயருடன் சேர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 1939 இல் நடத்தித் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலில் நுழைந்து வழிபாடு செய்யும் உரிமையைப் பெற்றுத்தந்தார்.
கக்கன் இந்துவாக இருந்தாலும் கிறித்தவ சமயத்தைச் சேர்ந்த சொர்ணம் பார்வதி என்ற அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். அதுவும் 1932 இலேயே சீர்திருத்தத் திருமணம் செய்தார். இந்தத் திருமணத்திற்குத் தலைமை தாங்கியவர் பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் பா. ஜீவானந்தம் என்பது குறிப்பிடத் தக்கது.
தந்தை பெரியார் இந்துக்களின் வழிபடு கடவுளான இராமபிரானின் உருவப் படத்தை எரிக்க முற்பட்ட போது, அதைக் கண்டித்தார். மீறி எரித்தபோது அதற்காக அவரைச் சிறையிலும் அடைத்தார்.
இறுதிவரை ஏழ்மையிலேயே வாடிய கக்கன் நோய்வாய்ப்பட்ட போது உயர் ரக சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள வசதியின்றி சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். நினைவிழந்த நிலையில் இரு மாதங்கள் இருந்த அவர், 1981 டிசம்பர் 23 ஆம் நாள் உலக வாழ்வை நீத்தார்.
அமைச்சர் பதவியிலிருந்த காலத்தில் தனது பதவியை அவர் ஒருமுறைகூட முறைகேடாகப் பயன்படுத்தியதில்லை. அரசு தனக்கு ஒதுக்கியிருந்த வீட்டில் தமது நெருங்கிய உறவினர்களைக்கூடத் தங்குவதற்கு அனுமதித்தில்லை. அதே போல, அரசு தனக்குத் தந்த ஊர்தியில் தன் குடும்பத்தார் பயணம் செய்யவும் அனுமதித்தில்லை.
இப்படிப்பட்டவர் வாழ்ந்த நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பது நமக்குப் பெருமை. எதிர்காலத் தமிழகத்தை ஏற்றமுறச் செய்யவுள்ள இளைய தலைமுறைக்குக் கக்கனின் தூய பொதுவாழ்வு ஓர் எடுத்துக்காட்டு.
Subscribe to:
Posts (Atom)