Showing posts with label பக்தி இலக்கியம். Show all posts
Showing posts with label பக்தி இலக்கியம். Show all posts

Saturday, March 31, 2012

கொங்கு நாட்டில் கண்ணகி வழிபாடு


சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் காப்பியத்தின் மையப் பொருளாக, கதையைக் கூற வந்த நோக்கமாக எடுத்தியம்புவது, பத்தினியை மேலோர் போற்றி வணங்குவர் என்பதாகும். உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் என அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பத்தினித் தெய்வமாகிய கண்ணகி மாரியம்மனாகத் தமிழகம் எங்கும் வணங்கப் படுகிறாள்.
கோவலன் மதுரையில் கொல்லப்பட்டு, அம்மூதூர் கண்ணகியால் எரியூட்டப்பட்ட பின்னர் பல ஆண்டுகள் மழை வளமின்றி வறண்டுபோக, பின்னர் வந்த பாண்டிய மன்னன் மழை வேண்டிக் கண்ணகிக்குக் கோயில் எடுத்து வழிபட, நாடு மழை வளம் பெற்றுச் செழித்ததாம்.
மாரி என்றால் மழை. மழைக்காக வழிபடப்பட்ட அம்மன் மாரியம்மன். தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களில் மாரியம்மன் கோயில்கள் இருப்பதைப் பார்க்கிறோம். பின்னாளில் இது சக்தி வழிபாடாகக் கொண்டாடப் பட்டாலும் மாரியம்மன் வழிபாட்டின் தொடக்கம் கண்ணகி வழிபாடே!
கொங்கு நாட்டிலும் பெரும்பாலான ஊர்களில் மாரியம்மன் கோயில்கள் உள்ளன. கோவை மாநகரின் மையப்பகுதியில் தண்டு மாரியம்மன் கோயில் உள்ளதைக் கோவை மக்கள் அனைவரும் அறிவர்.
வறட்சியான கோடைக் காலங்களில் மழை வேண்டி மாரியம்மனுக்குத் திருவிழா நடத்தப் படுவது வழக்கமாக உள்ளது. இது ஆதியில் நடைபெற்ற கண்ணகி வழிபாட்டை எடுத்துக் காட்டுகிறது.
திருவிழாவின் போது கோயிலின் முன்புறத்தில் முக்கொம்புக் கம்பத்தில் பூவோட்டில் எரி வளர்ப்பதும், பக்தர்கள் பூவோட்டில் தீயேந்தி வருவதும் மதுரையைக் கண்ணகி எரியூட்டியதைப் போற்றுவதாக இருக்கலாம்.
தேனி மாவட்டத்திற்கு அருகில் தேசியத்திற்காகத் தமிழகம் கேரளத்திடம் இழந்த பகுதியிலுள்ள மங்கலதேவி கோயிலைச் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கட்டிய கோயிலென்று ஆண்டுதோறும் தமிழக மக்கள் சென்று வழிபட்டு வருகின்றனர்.
கொங்கு நாட்டிலும் கண்ணகி மங்கல தேவியாக வழிபடப் படுகிறாள்.
கோவை மாவட்டம் ஆலாந்துறைக்கு அருகிலுள்ள நாதகவுண்டன்புதூரிலிருந்து வடிவேலாம்பாளையம் செல்லும் சாலையில் மங்கலம்மன் கோயில் ஒன்றுள்ளது. இது இப்பகுதியைச் சேர்ந்த ஏழு ஊர் மக்கள் விழா எடுத்துக் கொண்டாடும் கோயிலாகும். இப்பகுதி கொங்கு நாட்டின் மேற்கெல்லைப் பகுதியாகும்.
இக்கோயிலில் சுடுமண்ணால் செய்யப்பட்ட யானை மற்றும் குதிரைச் சிற்பங்கள் மிகப்பெரிய அளவில் முன்னர் நிறைய இருந்தன. பாதுகாப்பற்ற நிலையில் தற்போது அவை அழிந்து விட்டன.
இக்கோயில் திருவிழாவிற்கு நாதகவுண்டன்புதூருக்குத் தென்மேற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியிலுள்ள மங்கலம்மன் சோலை என்னும் அடர்ந்த காட்டிலிருந்துதான் கரகம் கொண்டு வருவார்கள். அதைக் கொண்டுவரும் உரிமை அப்பகுதியிலுள்ள மலைவாழ் பழங்குடி மக்களுக்கே உரியது. ஆனால் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இக்கோயில் திருவிழா நடத்தப் படவில்லை.
மலையுச்சியிலுள்ள மங்கலம்மன் சோலையிலும் ஒரு மங்கலம்மன் கோயில் உள்ளது. திறந்த வெளியில் நடுகற்களைத் தெய்வமாக வழிபடுபவர்கள் இந்த மங்கலம்மன் சோலையையொட்டியுள்ள பாறைப்பட்டி என்னும் மலைக் குடியிருப்பைச் சேர்ந்த பழங்குடி மக்களும், நாதகவுண்டன்புதூர் மக்களுமாவர். தற்போது பாறைப்பட்டியைச் சேர்ந்த பெரும்பாலான பழங்குடி மக்கள் இடம் பெயர்ந்து விட்டனர்.
மங்கலம்மன் சோலையில் ஒவ்வோராண்டும் சித்திரைத் திங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதில் ஆடுகளை உயிர்ப்பலி தரும் வழக்கம் உள்ளது.
மங்கலம்மன் சோலைக் கோயிலுக்குக் கிழக்கில் உள்ளது பாறைப்பட்டி. அதற்கும் கிழக்கில் கோபாலசாமி கோயில் என்னும் மலை வழிபாட்டிடம் ஒன்று உள்ளது. இது வட்டமாகப் பரந்திருக்கும் ஒரு பாறைப் பரப்புத்தான். இது கோபாலசாமி கோயிலா, கோவலன்சாமி கோயிலா என்பது ஆய்வுக்குரியது. பண்டை நாட்களில் ஆடு, மாடு மேய்க்கும் மக்களால் கோபாலசாமியாகத் திருமால் வழிபடப் பட்டிருக்கலாம் என்பது ஒரு கருத்து.
ஆனால்,  அருகிலுள்ள மங்கலம்மனை மங்கலதேவி எனப் போற்றப்படும் கண்ணகிதேவி வழிபாடெனக் கொண்டால் இதனைக் கோவலன்சாமி கோயிலாகக் கருதலாம். சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம் குன்றக்குரவையில் மலைவாழ் பழங்குடி மக்கள் தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே எனக் கண்ணகியைத் தெய்வமாக வழிபடத் தொடங்கியதாகக் கூறப் பட்டுள்ளதை, இது கண்ணகி வழிபாடெனக் கொள்வதற்குச் சான்றாகக் கொள்ளலாம். எனவே மலைவாழ் மக்கள் இங்கும் கண்ணகியை வழிபடும் வாய்ப்புகள் உண்டு.
கண்ணகி கோவலனுடன் வானுலகம் சென்ற செய்தியைச் சேரன் செங்குட்டுவனுக்கு மலைவாழ் மக்கள்தான் கூறியதாகச் சிலப்பதிகார வஞ்சிக் காண்டம் காட்சிக்காதையில் செய்தி உள்ளது. சேரன் செங்குட்டுவன்  கண்ணகிக்காக இமயத்தில் கல்லெடுத்துவரப் படையுடன் சென்றபோது இந்தப்பகுதி வழியாகத்தான் சென்றிருக்க வேண்டும் என முனைவர் ந. இரா. சென்னியப்பன் அவர்கள் கூறுகிறார்.
எனவே கொங்கு நாட்டில் வழிபடப்படும் மங்கலம்மனும், மாரியம்மனும் கண்ணகிதேவியே எனக் கருதலாம்.

Wednesday, February 17, 2010

தலைவர் பணிதலைநின்ற திருவணையார் திருவெண்காட்டு நங்கை

சிவனடியார்களான திருத்தொண்டர்களின் வரலாற்றைத் தம் பெரியபுராணத்தில் எடுத்துரைத்தவர் சேக்கிழார் பெருமான். அதில் அத்திருத்தொண்டர்களை நெறிப்படுத்தியவர்களாகவும், தாமே தொண்டு செய்பவர்களாகவும், தொண்டர் பணிக்குத் துணை நின்றவர்களாகவும் விளங்கும் மங்கை நல்லார்களின் அரும்பணிகளையும், பெருமைகளையும் சிறப்பாக விளக்கியுள்ளார்.
ஒருவனுக்கு மனைவி பெருமையுடையவளாக இருந்தால் அவனுக்கு இல்லாதது யாது? என்பார் வள்ளுவப் பெருந்தகையார். அப்படிப்பட்ட மனைவியரைப் பெற்ற திருத்தொண்டர் பலரில் சிறுத்தொண்ட நாயனார் ஒரு முதன்மையான இடத்தை வகிக்கிறார். அவரது துணைவியாரான திருவெண்காட்டு நங்கை கணவரது திருத்தொண்டில் செய்த அரும்பணியை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
சிறுத்தொண்ட நாயனார்
பல்லவ மன்னர் நரசிம்மவர்மரின் படைத் தலைவராக இருந்து வடதிசைப் போரில் வாதாபி நகரை அழித்து வெற்றியைக் கண்டவர் பரஞ் சோதியார். பின்னர் படைத் தொழிலினின்றும் நீங்கி சிவத்தொண்டுக்கு வந்தவர். சிவனடியார்களுக்கு முன்னர் தம்மை சிறு தொண்டராக்கிக் கொண்டு அவர்களுக்குப் பணிசெய்ததால் இவர் சிறுத்தொண்டர் என்று அழைக்கப்பெற்றார். பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ள பல நாயன்மார்களைப் போல இவரும் சிவத்தொண்டர்களுக்கு முதலில் உணவிட்டு அதன் பின்னர் தாம் உண்ணுதலை வழக்கமாகக் கடைப்பிடித்து ஒழுகினார். இவருக்கு உற்ற துணைவியாராய் வாய்த்தவர் திருவெண்காட்டு நங்கை அம்மையார்.

திருவெண்காட்டு நங்கை
சிறுத்தொண்டரின் மனைவியார் திருவெண்காட்டு நங்கை என்று குறிப்பிடப்படுகிறார். இவரது பெயரே இதுதானா, அன்றி திருவெண்காடு ஊரைச் சேர்ந்தவராக இருந்து இப்பெயர் பெற்றாரா என்பது அறியக்கிடைக்கவில்லை.
தீதில்குடிப் பிறந்த திருவெண்காட்டு நங்கை என்றே சேக்கிழார் குறிப்பிடுகிறார். எழுத்தாளர் கல்கி தனது சிவகாமியின் சபதம் புதினத்தில் இந்த அம்மையாரை திருவெண்காட்டைச் சேர்ந்தவராகக் குறிப்பிட்டுள்ளார். சிறுத்தொண்டரான பரஞ்சோதியார்க்கும் - திருவெண்காட்டு நங்கையார்க்கும் பிறந்த ஆண் மகவு சீராளன்.

சிறுத்தொண்ட நாயனார் புராணச் சுருக்கம்
சிறுத்தொண்டர் நாள்தோறும் சிவனடியார்களைத் தன் இல்லத்திற்கு அழைத்து முன்னம் உணவு உண்ணச் செய்து அதன் பிறகு உண்ணும் வழக்கத்தைக் கொண்டு ஒழுகினார். திருவெண்காட்டு நங்கையாரும் உறுதுணையாக இருந்து வந்தார். இவர்கள் வீட்டில் பணி செய்த தாதி சந்தனம் என்னும் பெயருடையவர்.
சிவபெருமான் சிறுத்தொண்டரின் தொண்டினை அறிந்து அவருக்கு அருள்புரியத் திருவுளம் கொண்டார். எப்போதும் அடியாரைச் சோதித்தே அருள்புரியும் தன்மை கொண்டவராதலால் வயிரவச் சிவனடியார் கோலத்தோடு வந்து சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறி கேட்கிறார். சிறுத்தொண்டரும் திருவெண்காட்டு நங்கையாரும் தம் பிள்ளையைக் கறி சமைத்து உண்ணத் தருகின்றார்.
கறியை உண்ணாது, மகன் சீராளனை அழைக்குமாறு கூறினார் வயிரவக்கோலச் சிவபெருமான். இவர்கள் மகனைக் கூவி அழைக்க அவன் பள்ளியிலிருந்து வருகிறான். இவர்கள் வயிரவரைப் பார்க்கத் திரும்பினால் அவர் மறைந்துவிடுகிறார். கறியுணவும் காணவில்லை. பின்னர் உமையம்மையார் மற்றும் புதல்வர் முருகனோடு காட்சி தந்து அனைவரையும் சிவனுலகத்திற்கு அழைத்துச் சென்றார். இதுதான் கதைச் சுருக்கம்.
இனி தலைவர் பணி தலைநின்ற திருவெண்காட்டு நங்கையின் தன்மைகளைப் பார்ப்போம்.

திருவெண்காட்டு நங்கையின் கற்புத்திறம்
கணவனையன்றிப் பிறிதொரு ஆடவனை மனத்தாலும் எண்ணாத தன்மையைக் கற்பெனக் கூறும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. கணவனோடு ஒத்த கருத்தோடு இணைந்து வாழ்தலும், கணவனுக்குப் பணிவிடை செய்தலையும், கணவனது வாழ்வுக்காக எந்த ஈகத்தையும் செய்தலையும் கற்புத் தன்மையாகவே கொள்ளலாம்.
வள்ளுவப் பெருந்தகையார் தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுதெழுபவளைப் பெய்யெனப் பெய்யும் மழைக்கு ஒப்பானவள் என்று கூறுவது ஈண்டு நினைவு கொள்ளத்தக்கது.
திருவெண்காட்டு நங்கையார் நாள்தோறும் தன் கணவர் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சிவனடியார்களுக்கு உணவு சமைத்து விருந்தோம்பி வருதலைத் தன் கடமையாகக் கொண்டிருந்திருக்கிறார்.
ஆனால் சிவனடியாராக இருந்தாலும் அவர் அந்நிய ஆடவராக இருந்ததால் அவரை வணங்கிப் பணிவிடை செய்தாலும் அந்த அடியார்களைத் தீண்டியதில்லை. இதை சேக்கிழார் பெருமான் அடியவராக வந்த சிவபெருமானுக்குத் திருவடிகளைக் கழுவும்போது நங்கையார் அப்பணிவிடையைச் செய்யவில்லை. அவர் நீர்வார்க்க சிறுத்தொண்டரே கால்களைக் கழுவினார் என்று குறிப்பிடுகிறார்.
அடுத்து,கணவனுக்காகத் தான் பெற்ற மகனையே இழக்கத் துணிகிறார். கணவர் சிவனடியார்க்கு உணவிடாமல் உண்ணும் நிலை வந்தால் உயிரைப் போக்கிக் கொள்வேன் என்னும் பண்பு நிலையுடையவர். எனவே கணவரின் அரிய உயிரை எனக்கு இந்தப் புதல்வன் அளித்தான் என்றார்.
.... கணவனார் அருமை உயிரை எனக்களித்தான்... (3723)
என்னும் பாடலடிகளில் சேக்கிழார் இதனைக் கூறுகிறார்.

தலைவர் பணி தலை நிற்றல்

சிறுத்தொண்டர் திருச்செங்காட்டங்குடியிலுள்ள கணபதீச்சுரம் என்னும் கோயிலில் அருள்புரியும் சிவபெருமானை வழிபட்டு வந்தார். அத்தோடு அடியார்க்குத் திருவமுது செய்து உண்பித்தலைத் தலையாய தொண்டாய்ச் செய்து வந்தார்.

இந்தத் தொண்டுக்கு அவருடன் ஒத்துப்போய் உதவுபவராக வந்தமைந்தவர் திருவெணகாட்டு நங்கை. இவரை சிவபெருமானின் அடியவர்களுக்கு வேண்டிய பணிகளையெல்லாம் செய்பவராய்க் குற்றம் அற்ற குடியில் பிறந்த திருவெண்காட்டு நங்கை என்று சேக்கிழார் பெருமான் அறிமுகப் படுத்துகிறார். வேதகா ரணர்அடியார் வேண்டியமெய்ப் பணிசெய்யத் தீதில்குடிப் பிறந்ததிரு வெண்காட்டு நங்கை எனப் பாடலில் இவரது பெருமையை எடுத்துரைக்கிறார்.

தலைவர் பணியில் தலைநிற்றல் அவரது பெருமைக்குரிய அரும்பணியாகக் குறிப்பிடுவது தான் பெற்ற மகனையே கணவரது திருத்தொண்டுக்காக இழக்கத் துணிந்தது. இது வேறு எந்தத் ஒரு நற்றாயாலும் செய்ய இயலாத செயல்.

பத்து மாதம் சுமந்து பெற்றுப் பாலுட்டிச் சீராட்டி வளர்த்த மகன். குழந்தை பிறந்த போது அலங்கரித்துப் பெருமை கொண்டு சுற்றத்தார் மகிழ்ச்சியடைந்தனர். இந்த உவகை மேலோங்கித் திருச்செங்காட்டங்குடியிலுள்ள மக்கள் எல்லோரும் நெய்யாடல் விழாச் செய்து கொண்டாடினர். அக்குழந்தை அந்த ஊருக்கே திருமகனாக விளங்கியிருக்கிறது. அதை இழக்கத் துணிந்திருக்கிறார் திருவெண்காட்டு நங்கை.

அஃறிணை உயிர்கள் கூடத் தாம் ஈன்றெடுத்த மகவைத் தம் கண் முன்னால் இழக்கத் துணிவதில்லை. காக்கையின் குஞ்சு கூட்டிலிருந்து தவறிக் கீழே விழுந்து விட்டால் தாய்க் காக்கை அந்த வழியில் போவோரையெல்லாம் பறந்து சென்று கொத்த முயல்கிறது. கன்றை ஈன்றெடுத்த ஆவினம் அதை எவ்வளவு அன்போடு பால் தந்து காக்கிறது. இதைத்தான், கன்றினுக்குச் சேதா கனிந்திரங்கல் போல் எனப் பராபரக் கண்ணி கூறுகிறது.

பறவைகளும், விலங்குகளுமே இப்படி இருக்கையில் ஆறறிவு பெற்ற மனிதப் பிறவியைக் பற்றிச் சொல்லவும் கூடுமோ

சுருண்ட மயிர் நிறைந்த நெற்றியில் சுட்டி என்ற அணி, இரு காதுகளிலும் குதம்பை என்ற அணி, கழுத்தில் கண்டசரம் என்ற அணி, மார்பில் ஐம்படைத்தாலி என்ற அணி, கைகளில் வைரத்தால் ஆன சரி என்ற அணி, கால்களில் சதங்கை என்ற அணி என உடல் முழுவதும் அணி பூட்டி அலங்கரித்துச் சீராட்டி வளர்த்துப் பள்ளிக்குச் செல்லும் சிறுவனைச் சிவனடியாருக்குப் பிள்ளைக் கறியாகத் தரக் கணவனோடு உடன்படுகிறார். ஒரு குடும்பத்துக்கு ஒரே மகனாக உள்ள சிறுவனைத் தந்தை அரியவும் தாய் பிடிக்கவும் அப்போது இருவரும் தமக்குள் உள்ளம் மகிழ்ந்து குற்றம் இல்லாது அமைத்த கறியே நாம் இட்டு உண்பதாகும் எனக் கேட்கிறார் வைரவ வேட இறைவன்.
அப்படியே செய்ய ஒப்புதல் தந்தார் சிறுத்தொண்டர். தன் மகனை விருந்தாக்க எண்ணி ஒப்பில்லாத மகன் மெய்யாம் தன்மையை எனக்கு அளித்தான் என்று மகிழ்கிறார் அவர். அவரது மனைவியாரான திருவெண்காட்டு நங்கையாரோ, கணவனாரின் அரிய உயிரை எனக்கு இப்புதல்வன் அளித்தான் என மகிழ்ச்சியுற்றார். புதல்வன் உயிர் போதல் பற்றிக் கவலைப்படவில்லை. கணவர் தனது கொள்கையிலிருந்து பிறழும் வாய்ப்பு ஏற்பட்டு அவரது உயிர் போய்விடாதபடி தனது மகனே அடியார்க்கு விருந்தாகிக் கணவரைக் காத்ததை எண்ணி மகிழ்ந்தார் எனில் கணவர் பணியில் அவரது ஈடுபாடு எந்த அளவுக்கு இருந்துள்ளது என்பது அறியக் கிடைக்கிறது. அறுத்து எடுத்த தலையின் இறைச்சி உணவுக்கு ஆகாதென்று கழித்து அதை சந்தனத்தாதியாரிடம் கொடுத்துவிட்டு மற்ற உறுப்புக்களின் இறைச்சியைக் கொத்தியும், அறுத்தும், காய் வகைகளை அமைத்துக் கூட்டியும் விரைவில் சமைத்து முடித்து அதைத் தம் கணவனார்க்கு உரைத்தார்.
பின் கணவரோடு சேர்ந்து அவரே அக்கறி உணவை அடியார் கோலத்து இறைவர் உண்ணப் படையலிட்டார். தான்பெற்ற புதல்வனைக் கொன்று சமைத்து வந்தவர்க்கு விருந்து படைத்த பாங்கு கணவர் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பெண்கள் வேறு எவரும் செய்யாத ஒன்று.


தாம் பெற்ற குழந்தை இயற்கையாகவே இறந்து விட்டாலே தாயாரால் தாங்கிக் கொள்ள இயலாது என்னும் நிலையில் கணவர் தம் புதல்வனைக் கறி சமைத்துப் படைலிடுவதைச் சிறிது மறுத்திருந்தாலும் கணவர் பணி தடைபட்டு அதனால் கணவரையே இழந்திருப்பார் திருவெண்காட்டு நங்கையார். ஆனால் அவர் கணவர் பணியில் தலைநின்ற நங்கையாராதலால் ஒருவர் அடையும் செல்வங்களிலெல்லாம் பெரிய செல்வமான மக்கள் செல்வத்தையே இழக்கத் துணிந்தார். இதனால்தான் கணவரோடும், புதல்வரோடும், தாதியோடும் சிவனுலகம் புகும் அரிய வாய்ப்பைப் பெற்றார் திருவெண்காட்டு நங்கை. இதனால்தான் கணவர் பணியில் இவர் துணை நின்றவரல்ல, தலைநின்றவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.